ஒன்பது போட்டிகளில் பங்கேற்க தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது மண்முனை தென்மேற்கு : கொல்லநுலை 4முதலிடங்களை தனதாக்கியது.

மாவட்டமட்ட தனிவிளையாட்டுப்போட்டிகளில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்கு 9முதலிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கொல்லநுலை விவேகானந்த இளைஞர் கழகம் 4முதலிடங்களை தனதாக்கியுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட தனி விளையாட்டு நிகழ்வுகள் இன்று(14) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சிவானந்தா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இப்போட்டியில், மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்குட்பட்ட முனைக்காடு நாகசக்தி இளைஞர் கழக உறுப்பினர் வி.குபேனியா, 5000மீற்றர், 1500மீற்றர், 800மீற்றர் ஆகிய போட்டிகளில் பங்கேற்று மூன்று போட்டிகளிலும் முதலிடத்தினைப் பெற்று சம்பியன் ஆகியுள்ளார்.

அதேபோன்று கொல்லநுலை விவேகானந்த இளைஞர்கழகத்தினைச் சேர்ந்த இ.கிரிஜா குண்டுபோடுதல், முப்பாய்ச்சல் போன்ற போட்டிகளில் முதலிடத்தினையும், நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தினையும், வ.டுசாழினி 800மீற்றர் போட்டியில் 1ம் இடத்தினையும், 400மீற்றர் போட்டியில் 2ம் இடத்தினையும், 200மீற்றர் போட்டியில் 3ம் இடத்தினையும், கோமதி உயரம் பாய்தல் போட்டியில் 1ம் இடத்தினையும், கே.நாகலெட்சுமி நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போன்ற போட்டிகளில் 2ம் இடத்தினையும், வி.சத்தியவாணி பரிதி எறிதல், குண்டுபோடுதல் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளனர். அதே போன்று நாற்பதுவட்டை இளைஞர்கழகத்தினைச் சேர்ந்த திருக்குமார் 800மீற்றர் போட்டியில் முதலிடத்தினையும், எழில்தாரணி பரிதி எறிதலில் 1ம் இடத்தினையும் பெற்றுள்ளனர். மற்றும் அஞ்சல் ஓட்டப்போட்டிகளிலும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் மாவட்டமட்ட தனிவிளையாட்டுப் போட்டிகளில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவு இளைஞர் கழகங்கள் முதலிடங்களை பெறாத நிலையில், இவ்வருடம் ஒன்பது போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை மகிழ்சளிப்பதாகவும்; பிரதேச இளைஞர்சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தெரிவித்தார்.