மத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்களுடனான நேர்காணல்.

தாங்கள் சமுகசிந்தனையாளர், மனிதநேய பணிபுரியும் வைத்தியர் என்ற வகையில், நாட்டின் நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் சக்திகளாக எவ்வற்றினை அல்லது யாரை பார்க்கின்றீர்கள்?
ஒருநாட்டில் ஜனநாயகமும், நீதியும் உயர்ந்த இடத்தில் இருந்தால் சிறுபான்மை என்ற பிரச்சினை ஏற்படாது. இலங்கை நாட்டின் அரசியல், இனவாத, மதவாத, மொழிவாத அரசியலாகவே இருக்கின்றன. இதனால், எதிர்காலம் என்பது சூனியமான, நம்பிக்கையற்ற சூழலைதான் உருவாக்கும். இந்தநாட்டில் மனித நேய, மனித அபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து இனிவாத, மொழிவாத, மதவாத என்ற எண்ணப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் இலங்கையர்கள் என்ற தேசியவாத சிந்தனையேற்படுகின்ற போது, தீவிரவாத செயற்பாடுகளோ, யுத்தங்களோ இல்லாமல்போகும். ஏப்ரல் 21ல் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசியல்வாதிகள்தான் காரணம். இந்த நாட்டில் தேசியம் இல்லாமல் போய்விட்டது. ஜனநாயக ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைதான் இது இல்லாமல் போனதற்கு காரணம். நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாகவிருந்தால், தூரநோக்குள்ள, அரசியல் சிந்தனை உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை.
நல்லிணக்கத்தினை உருவாக்க எவ்வாறான அரசியல் சிந்தனையாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

குறுகிய சிந்தனைகளையுடன் சிந்திக்காமல் நீண்ட சிந்தனைகளுடன் சிந்திக்ககூடிய அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். பொருளாதாரம், கல்வி இரண்டிற்கும் பூரணமாக தீர்வுகாண்பதோடு, நீதியென்பதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். அத்தோடு ஜனநாயக விடயங்களை விரும்புகின்ற, நேசிக்கின்ற மதிக்கின்ற சிந்திக்கின்ற புதியவர்கள் உருவாக வேண்டும். அவ்வாறான புதியவர்களால் மாத்திரம்தான் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

இனநல்லுறவு இல்லாமல் செல்வதற்கு காரணம் எவையென கருதுகின்றீர்கள்? தற்போதைய சூழ்நிலை பற்றிய உங்களது கருத்து என்ன?

இனத்தின் நல்லுறவு எனும் வகையில், இச்சம்பவங்கள் மட்டும் காரணமல்ல. வடக்கு, கிழக்கிலே நடைபெற்ற யுத்தத்தின் விளைவுகளினால் பலர் வறுமைக்கோட்டின்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம், காணிதொடர்பிலான பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இப்பிரச்சினைகள் எல்லாம்; ஒருநாள் பூகம்பமாக உருவாக கூடிய சூழலும் உள்ளது. தற்போதைய சூழல் ஒரு சமாதானமான இடைக்கால சாதாரண விடயமாகவே உள்ளது. இச்சமாதானமான சூழல் மக்களுக்கு ஆறுதலான சூழலே தவிர தீர்க்கமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானமான சூழலாக இல்லை.

நல்லுறவை ஏற்படுத்த எவ்வாறான சட்டங்களையும், எவ்வாறான விடயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்?

இலங்கையில் மறைமுகமான சூழல் காணப்படுகின்றது. முஸ்லிம்சகோதரர்களுடன் எந்த முரண்பாடுகளும் எமக்கு இல்லை, அவர்களது உரிமைகளை பறிப்பதற்கு நாங்கள் சிந்திக்கவில்லை. இங்கு வளர்க்கப்பட்ட அரசியல் மதவாத அரசியல்தான். கிராமங்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் மொழி, இன, மத வாத அரசியலே வளர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக முஸ்லிங்களுக்கென்றொரு அரசியல், தமிழ்மக்களுக்கென்றொரு அரசியல், சிங்கள மக்களுக்கொரு அரசியல் சிந்தனை இருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கென்று எல்லா நீதியும், எல்லாச்சட்டங்களும் இருந்தால்மட்டும் தான், இனங்களுக்கிடையில் நல்லுறவை எதிர்பார்க்க முடியும். அது இல்லாததினால்தான் ஏப்ரல் 21போன்ற பிரச்சினைகளை தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினை எவ்வகையில் நோக்குகின்றீர்கள்?

ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற சம்பவம் நாட்டின் பொருளாதாரம், எதிர்கால பொருளாதாரம், எதிர்கால பாதுகாப்பு எல்லா விடயங்களையும் சீர்குலைத்த சம்பவமாக பார்க்கின்றேன். முஸ்லிம் மக்களை வெறுக்ககூடிய சூழலில் நாங்கள் இல்லை. அவர்களுடனும் சமாதானமாக சேர்ந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு 10இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிகின்றனர். எண்ணெய் போன்ற நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய வளங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் கிடைக்கப்பெறுகின்றன. எல்லா மக்களோடும் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமாகதான் எல்லா மக்களும் ஒன்றுபட்ட தேசியத்தின் ஊடாக இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறப்படைய வைக்க முடியும்.
கடந்த யுத்தத்தின் காரணமாக பலகோடி அமெரிக்க டொலர் பணம் வீணாகி இருக்கின்றது. பொருளாதாரம் அவ்வாறு சிதைக்கப்படும் நேரத்தில் மக்கள் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இச்சம்பவங்களை படிப்பினையாக கொண்டு எல்லோரும் ஒன்றுபட்ட இலங்கை மக்களாக, நீண்ட நோக்குள்ள, தலைமைத்துவம், நீண்ட அரசியல் சிந்தனையின் ஊடாகத்தான் விடிவு, முடிவு, நம்பிக்கையை உண்டுபண்ண முடியும்.

கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அரசியல் சிந்தனையின் அடிப்படையில் ஒவ்வொரினது கருத்துக்களைச் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறான கருத்துக்கள் ஒவ்வொருவரையும், நாட்டினையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். நாட்டினை நேசிக்ககூடிய சமுகம் தேவை. அவ்வாறிருந்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்துதல் சம்பவம் புரிந்துணர்வின் அடிப்படையில் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கும் மனிநேய, மனிதஅபிமான பண்பே அவசியம்.

நல்லுறவை ஏற்படுத்துவதில் நாட்டின் தலைமை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பௌத்த தர்மம் சிறந்துவளர்ந்தோங்கிய இலங்கை நாட்டில், மனிதனுடைய வாழ்கையை உயர்ந்த சிந்தனையோடு நோக்கியவர்தான் புத்தபெருமான். ஈக்கும், எறும்புக்கும் கூட பாவம் செய்யாதே எனக்கூறியவர். புத்தபெருமானின் போதனைகளை ஏற்றுக்கொண்டால் இந்த நாடு சிறந்ததொரு நாடாக மாறும். புத்ததர்மம் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படாமைதான் யுத்தம் நடைபெற்றதற்கும் காரணம். எல்லோருக்கும் மத உரிமை இருக்கின்றது. மதத்திற்கும் அப்பால் மனிதநேயத்திற்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும். முரண்பாடுகள் இருக்கும் வரை ஜனநாயகமோ, சமாதானமோ கிடைக்காது, கிடைக்கமுடியாது. இம்முரண்பாடுகளை தீர்க்க உடன்பட வேண்டும். எவ்வாறு உடன்பட வேண்டும் என்றால் நான் இலங்கையர் என்ற எண்ணப்பாட்டுடன் உடன்பட வேண்டும். அப்படியான அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் கிடைத்தால்தான் தூய்iமான நல்லிணக்கம் ஏற்படும். தீவிரவாதிகள், தீவிரவாத சிந்தனையாளர்கள் நாட்டில் இருப்பார்கள்தான், அவர்களை மனிதநேய பண்புள்ளவர்களாக மாற்றவேண்டும். இதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாத விடயமல்ல.