இரு நாட்களில் அசுரவேகத்தில் இடம்பெற்ற அரசியல் அதிகாரம்!

இரு நாட்களில் அசுரவேகத்தில் இடம்பெற்ற அரசியல் அதிகாரம்!
தனியான கணக்காளருக்கான அனுமதியை திறைசேரி வழங்கியது.
(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு அதிகாரபூர்வமான நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான வேலைத்திட்டம் இருநாட்களில் அசுரவேகத்தில் நடந்தேறியிருக்கிறது.

நாட்டின் பிரதமரின் நேரடிஉத்தரவின்பேரில் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் அமைச்சும் திறைசேரியும் இணைந்து இருதினங்களுள் நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

உள்நாட்டலுவலகள் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன 10ஆம் திகதி புதன்கிழமை நிரந்தரகணக்காளரை நியமிப்பதற்கான எவ்.ஆர்.71(F.R. 71) விண்ணப்பப்படிவத்தை மேலோப்ப கடிதத்துடன் திறைசேரிக்கு அனுமதிக்காக அனுப்பிவைத்தது.

மறுநாள்(11) திறைசேரியின் பதில் செயலாளர் தேசப்பிரிய அவ்விண்ணப்பத்தை திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தமரா டி பெரேராவிற்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்.

திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் சிபார்சுடன் நேற்றுமுன்தினம் (11) வியாழக்கிழமை மாலை பணிப்பாளர் நாயகம் தமரா டி பெரேரா ஒப்பமிட்டு அனுமதிக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலகத்தின் மூன்றாம்தர முழுமையான அதிகாரமுடைய கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியை D.M.S.  12/ 06 இலக்க அந்தக்கடிதம் வழங்கியுள்ளது.

குறித்த அனுமதிக்கடிதம் நேற்று உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் அமைச்சுக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் திஙகட்கிழமை(15) முதல் குறித்த பிரதேச செயலகத்தில் அதிகாரபூர்வ நிரந்தரக்கணக்காளர் நியமனம்பெற்று செயலாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது