தமிழ் மக்களால் உயரிடத்தில் வைத்து மதிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு கறைபூச நினைப்பது அவர் தனது முகத்திலே கரிபூசிக் கொள்வதை ஒத்ததாகும்.

ஜனாதிபதி போதைப் பொருளோடு தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியமை வெறும் இட்டுக்கட்டலே தவிர எவ்வித அடிப்படையும் கொண்டதல்ல. நாட்டின் தலைவராக இவ்வாறு பொறுப்பற்ற வகையிலே பேசுவது அவரை அவரே கலங்கப்படுத்திக் கொள்ளுகின்ற ஒரு செயலே ஆகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் மக்களால் உயரிடத்தில் வைத்து மதிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு கறைபூச நினைப்பது அவர் தனது முகத்திலேயே கரியைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் எனவும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினை போதைப் பொருள் விற்பனையோடு தொடர்புபடுத்தி பேசியமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் என்பது சித்தாந்த ரீதியானது அல்ல அது தற்காப்பில் தொடங்கி இனவிடுதலை என்ற வகையிலே வளர்ச்சிகண்ட ஒரு போராட்டமாகும். இவ்வகையிலே தமிழீழ விடுதலைப் புலிகள் சிறப்பிடம் பெறுகின்றார்கள். 30 ஆண்டுகாலப் போர் வரலாற்றில் விடுதலைப் புலிகளை பல்வேறு சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் சந்தித்திருக்கின்றார்கள். அவர்களுடைய இலட்சியம் நடவடிக்கைகள், ஒழுக்கம் என்பன பற்றி இவர்களெல்லாம் உயர்வாகவே பேசியிருக்கின்றார்கள். சில போர் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டதும் உண்மைதான் ஆனால் அவர்களின் ஒழுக்கம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து கூட அவர்களது ஒழுக்கம் தொடர்பிலே முறைப்பாடுகளோ முனுமுனுப்புகளோ இருக்கவில்லை. விடுதலைப் புலிகளும் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எவரொருவருக்கெதிராகவும் ஒழுக்க ரீதியாகவே அல்லது போதைப் பொருள்கள் தொடர்பாகவோ எவ்வித குற்றச்சாட்டும் இருக்கவில்லை. அவர்களது அரண்கள் தாக்கப்பட்டன, கப்பல்கள் தாக்கப்பட்டன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கெல்லாம் எவ்வித போதைப் பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதிப் போராட்டத்தின் பின் அவர்கள் இருந்த முழுப் பிரதேசமும் இராணுவத்தினர் வசமானது அங்கு கூட போதைப் பொருள்களோ அவற்றுக்கான தடையங்களோ இருந்ததாக எவ்வித செய்தியும் வெளிவரவில்லை. போர் முடிந்து 10 ஆண்டுகள் கழிந்திருக்கும் இக்காலப் பகுதியில் கூட விடுதலைப் புலிகளையும் போதைப் பொருள்களையும் தொடர்பு படுத்தி எவ்வித முரணான செய்திகளும் வரவில்லை.
இவையெல்லாம் இவ்வாறு இருக்க ஜனாதிபதி அவர்கள் போதைப் பொருளோடு தொடர்பு படுத்தி விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியமை வெறும் இட்டுக்கட்டலே தவிர எவ்வித அடிப்படையும் கொண்ட கூற்று அல்ல. நாட்டின் தலைவராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற வகையிலே பேசுவது அவரை அவரே கலங்கப்படுத்திக் கொள்ளுகின்ற ஒரு செயலே ஆகும். இதனால் விடுதலைப் புலிகள் எந்தவகையிலும் கலங்கப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களின் படைத்தளபதியான சரத் பொன்சேகா அவர்களே இதற்குச் சாட்சி.
தனது தெரிவு தொடர்பில் வடக்கு கிழக்கிற்கு வரும்போதெல்லாம் தமிழ் மக்களுக்கு நன்றி செலுத்திவந்த ஜனாதிபதி அவர்கள் இந்தத் தமிழ் மக்களால் உயரிடத்தில் வைத்து மதிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு கறைபூச நினைப்பது அவர் தனது முகத்திலே கரிபூசிக் கொள்வதை ஒத்ததாகும்.
ஐ.எஸ் தாக்குதல் நடைபெற்று முடிந்த கையோடு எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்ற செய்தியும் ஜனாதிபதியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி நிற்கின்றன என்ற தெரிவித்தார்