சம்பந்தனின் கருத்து தவறாக பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது…

சம்பந்தனின் கருத்து தவறாக பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடில் அதை கைவிடுவோம் என நீங்கள் நினைப்பீர்களானால் அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான நிலைப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது என்று கூறிய விடயத்தை ஆயுதம் ஏந்துவோம் எனக் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான பொருள்கோடல் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேசிய மாநாட்டில் சம்பந்தன் அவர்களின் உரை தவறான பொருள்கோடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அங்கு அவர் ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடில் அதை கைவிடுவோம் என நீங்கள் நினைப்பீர்களானால் அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான நிலைப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதை நாங்கள் பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார். இது பற்றி பல செய்தி ஊடகங்கள் சம்பந்தன் அவர்கள் ஆயுதம் ஏந்துவோம் எனக் கூறியுள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

கௌரவ அமைச்சர் மனோகணேசன் அவர்களும் இது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் அதில் அரசினால் ஏமாற்றப்பட்டதன் அதிருப்தியினால் தமிழ்த் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்களை ஊடகங்கள் திரிபுபடுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புக்கள் சுக்கு நூறாகி விட்டன அதனால் சோர்வுற்றுப் பேசியுள்ளார் அவர் கலக்கம் அடைந்து அதிருப்தியிலே கூறிய பேச்சே அதுவாகும் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, வடகிழக்குப் பகுதிகளுக்குச் சென்று ஆயுதப் போராட்டமோ அல்லது தனி நாட்டுச் சிந்தனை குறித்தோ யாராவது பேசினால் தடிகளைக் கொண்டு தான் தாக்குவார்கள் என்றும் கூறியுள்ளார். அவர் இவ்விடயம் பற்றி சற்று மிகப்படுத்தலாகக் கூறியுள்ளதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழரசுக் கட்சி அறவழியில் தன்னுடைய போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரு கட்சியாகும். தலைவர் சம்பந்தன் அவர்கள் முதிர்ச்சியாலோ, சோர்வாலோ தெளிவற்ற கருத்துக்களைப் பேசுபவர் அல்ல. ஒருவர் கருத்துரைக்கும் போது அதற்கான பொருள்கோடலை அவருடைய நிலையில் நின்று பார்க்க வேண்டுமே ஒழிய கருத்துரைப்பவர் தனது மனப்பாங்கிற்கு ஏற்ற விதத்தில் பொருள்கோடல் செய்தலாகாது.

தலைவர் சம்பந்தன் அவர்கள் ஆயுத பலம் இல்லாவிடின் அரசியற் தீர்வு சம்பந்தமான ஆக்கபூர்வமான கருமங்களை பேண மாட்டீர்கள் என்றால் அதை நாங்கள் பரிசீலிப்போம் என்றே குறிப்பிட்டிருக்கின்றார். அவர் எப்போதும் தன்னுடைய வார்த்தைகளைத் தெளிவாகவே பேசுபவர். அவர் குறிப்பிட்டுள்ள சூழ்நிலையில் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்ற சொற்பிரயோகத்தைப் பாவிக்க வேண்டி இருந்தால் அதை அவர் தெளிவாகவே கூறியிருப்பார்.

தமிழரசுக் கட்சியின் வழி தந்தை செல்வாவின் வழி அது சாத்வீக வழி. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு எங்களுடைய அறவழிச் செயற்பாடுகளின் மூலம் எதிர்த் தரப்பினரைச் சிந்திக்கச் செய்து நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கும் இலட்சியமும் ஆகும். வேறுவித பலன்களால் அடையப்படும் அடைவு என்பது அப்பலம் இல்லாத போது பலவீனப்பட்டு விடும். எனவே தான் தலைவர் அவர்கள் தீர்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வு என்பதை வலியுறுத்துவதுண்டு. இவ்வகையிலே ஆயுதபலம் இல்லாவிட்டால் அரசியற் தீர்வு நடவடிக்கைகளைக் கைவிடுவீர்கள் என்ற விடயத்தைப் பரிசீலிப்போம் என்பது ஆயுதம் ஏற்துவோம் என்பதை எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை.

எனவே இவ்வாறான சூழ்நிலையில் எமது தீர்வை அடைவதற்காக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய வழி பற்றி தீவிரமாக பரிசீலித்து முடிவெடுப்போம் என்பதே சம்பந்தன் ஐயா அவர்களின் உரையின் பொருள்கோடலாகும். ஆகவே பொருள்கோடல் செய்வோர் மூலத்தில் இல்லாத விடயத்தை தங்கள் பார்வையில் பொருள்கோடல் செய்து விடயங்களைக் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.