மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை அரக்கனை விரட்டியடிக்க முன்வாருங்கள்

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை அரக்கனை விரட்டியடிக்க முன்வாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை  நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான இறுதி நிகழ்வு இன்று திங்கட்கிழமை(1.7.2019) மாலை 4.00 மணியளவில்  மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்,திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி),உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி,பிரதேச செயலாளர்கள்,உதவிச்செயலாளர்கள்,மாவட்ட செயலக திணைக்கள தலைவர்கள்,உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் போதைப்பாவனையினை தடுக்கும் வகையிலான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அதனை அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போதைப்பாவனையினை தடுக்கும் கையெழுத்துப்பெறும் பணியினை மாவட்ட அரசாங்க அதிபர் கையெழுத்திட்ட ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது போதைப்பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தெரு நாடகம் ஒன்று கிரான்குளம் யுகா கலைக்கழகத்தின் ஏற்பாட்டிலும்,விழுதுகள் நிறுவனத்தினால் “போதைப் பாவனையினால் நாட்டிலே நாளாந்தம் ஏற்படும் சமூகச் சீரழிவுகள்” ஓரங்க நாடகமும் நடாத்தப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பொது அமைப்புக்கள்,பொதுமக்கள், இளைஞர்கள் ,யுவதிகள் இணைந்து மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,பொலிசாருடன் சட்டவிரோத மதுபாவனை,கசிப்பு உற்பத்திகளை பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

வாகரை கட்டுமுறிவு கிராமத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அக்கிராமத்தில் முற்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு போதையற்ற கிராமமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1086 கிராமத்தில் போதைப்பொருள் தடுப்புவார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துக் தெரிவிக்கையில்…….இன்று நாட்டிலே போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் செயற்திட்டம் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போதையிலிருந்து நாட்டை மீளப்பெறுவதற்கு அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது நாட்டுக்கு கரையோரங்கள் ஊடாக போதைப்பொருள் கொண்டு வரப்படுகின்றது.எங்கள் நாட்டில் செயற்படும் சில குழுக்கள்,தனியார் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து சர்வதேச வலைப்பின்னல்களுடன் போதைப்பொருள் நாட்டுக்கு கடத்தப்படுகின்றது.இதனை முறியடிப்பதற்கு அரச உத்தியோகஸ்தர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டையும்,நமது மட்டக்களப்பு மாவட்டத்தையும் துரிதமாக மீட்க முடியும்.இதற்கு அரச உத்தியோகஸ்தர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் “கிழக்கு கடற்கரையோரங்கள் வழிப்பாதையின் ஊடாகத்தான் போதைப்பொருள் கடத்தப்பட்டு கொழும்பு உட்பட நாடுபூராகவும் விநியோகம் இடம்பெறுகின்றது” எனத் தெரிவித்தார். இவ்விடயமாக நாம் அனைவரும் தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.போதைப்பொருள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளை கடத்திக்கொண்டு மாவட்டத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கும்,மாவட்டத்தில் கசிப்புகாய்ச்சி தொழிலை விரைபடுத்தி செயற்படுவதற்கும் பல குழுக்கள் செயற்படுகின்றது.இவ்விடயமாக நாம் கரிசனை செலுத்த வேண்டும்.

எங்கள் சமூகத்தை போதைப்பொருளை விதைத்து அழிக்க திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மாவட்டத்தில் உள்ள பிரஜையும் வினைத்திறனுடன் செயற்பட தயாருங்கள்.ஒவ்வொரு கிராமத்திலும் போதைப்பொருளுக்கு எதிராகவும்,போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு அக்கிராமத்தில் விழிப்புக்களை உருவாக்கி அக்கிராமத்திலிருந்து முற்று முழுதாக போதைப்பொருளை ஒழித்துக்கட்டுங்கள்.இதற்கு அக்கிராமத்தில் உள்ள சமூக நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.போதைப்பொருள் பாவனைக்காக செலவுசெய்யும் பணத்தை கல்விக்கு செலவு செய்து ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்குங்கள்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் அதிகமான இழப்புக்களை சந்தித்த நாம் போதைப்பொருள் பாவனையை அனைவரும் தவிர்த்துக் கொண்டு நமது பிள்ளைகளின் கல்விக்கு புத்துயிர் அளித்து கல்வியை தங்களின் பிள்ளைக்கு ஊட்டுங்கள்.குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி வன்முறைகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.போதைப்பொருள் பழகத்தை வீட்டிலும், அயல்சூழலிம் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்து விரட்டுங்கள்.அப்போதுதான் நாம் கல்வியில் முன்னேற்றம் கண்டு பொருளாதாரத்தை சேமிக்கமுடியும் எனத் தெரிவித்தார்.