வாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்!

– படுவான் பாலகன் –
வேளாண்மைச்செய்கையை இந்த வருடம் கைவிடும் நிலைமைதான் ஏற்படும் போலிருக்கு என கனகசபை பன்சேனை சந்தியில் நின்று வேலுப்பிள்ளையிடம் கூறினான்.
சிறுபோக நெற்செய்கைக்காக நெல்விதைக்கப்பட்டு பயிரும் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் போலவிருக்கின்றது. இப்படிப்போன செய்த வேளாண்மையையும் கைவிட்டுத்து போறாதுதான் என கனகசபை கூறினான்.
குளத்தில நீரை சேமித்து வைச்சாலும், சிறுபோகம் செய்யிற காலத்திற்குள் மழை பெய்யலண்ட குளத்தில இருக்கிற நீர் காணாது. எப்படிதான் குளத்தில இருக்கிற நீரை பாய்ச்சினாலும் மாதத்திற்கு ஒரு மழையாச்சும் பெய்யாண்டி வேளாண்மைகளும் செழிபில்லை. நம்மட படுவான்கரையில ஒழுங்கா மழைபெய்து பல நாட்களாகிட்டு. இதனால பலவயல்கள் வரண்டுபோய் கிடக்குது. சில வயல்களில் புல்லுமட்டும்தான் நிற்குகின்றது. படுவான்கரை மக்களின்ட வாழ்வாதாரமே நெல் உற்பத்திதான். என்ன கஸ்டப்பட்டெண்டாலும், ஈடுவைத்தெண்டாலும், கடன்பட்டெண்டாலும் வேளாண்மை செய்கையை கைவிடுறல்லை.
நட்டமோ, இலாபமோ ஒவ்வொரு வருசமும் செய்த கால்கைகள் சும்மா இருக்காது செய்யத்தான் தொடங்கும். அதேபோலதான் இந்த வருடமும் வேளாண்மையைச் செய்கையில் படுவான்கரை மக்கள்; ஈடுபட்டுள்ளனர். இதன்போது, வேளாண்மைக்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். அந்நீர் குளத்தில் இருந்தே பாய்ச்சப்படுகின்றது. நீண்ட நாட்களாக படுவான்கரைப்பகுதியில் நினைத்தளவிலான மழை பெய்யாததினால் குளத்தின் நீர்மட்டமும் குறைந்துபோய் உள்ளது. இதனால் இருக்கின்ற நீர் வேளாண்மைக்கு பாய்ச்சுவதற்கு போதுமானதாகவில்லை.
சித்திரை மாதத்தில் வழமையாக மழைபெய்யும் ஆனால் இந்தவருடம் மழை மிகமிக குறைவே. வைகாசி மாதம்பிறந்தால் கண்ணகி அம்மன் கோயில் ஆரம்பித்துவிடும். கண்ணகி அம்மன் குளிர்த்தில் அன்றும் மழைபெய்யும் இந்தவருடம் அதையும் காணவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருப்பதுடன், நீரைப்பாய்ச்சுவதில் இரவு, பகலாக பல பிரயத்தனங்களை செய்து கொண்டிருக்கின்றனர். சில வயல்களுக்கு ஆறுகளை கட்டி நீர் பாய்ச்ச வேண்டும். சில வயல்களுக்கு இன்னொருவரின் வயல் ஊடாக நீர் பாய்ச்ச வேண்டும். அவ்வாறிருக்கையில் தற்போதைய நீர் பஞ்சம் காரணமாக, முன்னுக்குள்ளவர் ஆற்றினை கட்டி நீர் பாய்ச்சுவதற்கு ஆரம்பித்தால் பின்னுக்குள்ளவர் அவர் இல்லாதநேரத்தில் அதனை வெட்டி தான் பாய்ச்சுக்கொள்வது போன்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. நீர் பஞ்சம் காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. இதனால் விவசாயிகளிடம் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.
நீர்ஏத்துக்களை முன்னுள்ளவர்கள் நீர் இறைப்பதற்காக பயன்படுத்தினர். அவ்வாறான நீர்ஏத்துக்களின் பயன்பாடு இல்லாமல் சென்றதினால், நீர்பம்பிகளை கொண்டு நீர் உள்ள இடத்திலிருந்து வயலுக்குள் இறைக்கின்ற செயற்பாடுகள் தற்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாருடைய நெல்வயலை, யார் காப்பாற்றிக்கொள்வதென்ற அச்சமும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. மழைபெய்யாததன் வெளிப்பாட்டினாலையே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
உரிய காலத்திற்கு மழை கிடைக்காவிட்டால், பயிர்செய்கையில் பலனை காணமுடியாது. வேளாண்மை செய்கை என்பது, இலாபத்திற்கான தொழில் என்பதனைவிட வீட்டில் உணவு சமைப்பதற்கு அரிசி இருக்கும் என்ற எண்ணத்திலேதான் படுவான்கரைமக்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுகின்றனர். வீட்டில் நெல் இருந்தால் அதை சீதேவி என்கின்றனர். இதற்காகத்தான் எத்தனை வரட்சிகள், வெள்ளங்கள் வந்து வயல்கள் அழிந்து ஒருமூடை நெல்லுடன் வீடு திரும்பினாலும் வேளாண்மைச் செய்கையை கைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போதைய மழை இல்லாத நிலையில் இரவு, பகலாக விவசாயிகள் வயல்களிலே நீருக்கு அருகில் அதனைப்பெற்று வயலுக்குள் பாய்ச்சுவதற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தாம் அருந்துவதற்கு நீர் இல்லாவிட்டாலும் பயிருக்கு நீரை செலுத்துவதிலையே அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான் உழவுத்தொழில் செய்பவர்களை பிறர் வாழ தம்மை அர்ப்பணிப்பவர்கள் என சொன்னார்கள். இவ்வாறு விவசாயிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கூறிய வேலுப்பிள்ளை. மழை இல்லாத காலங்கள் வந்தால் தாந்தாமலை முருகன் ஆலயத்தில் பொங்கல் வைத்தல் மழைபெய்துவிடும். அதனைதான் செய்ய வேண்டும் எனக்கூறிக்கொண்டு கந்தசாமியும் தாந்தாமலை நோக்கி புறப்பட்டான்.