கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்!

– படுவான் பாலகன் –
படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் சீனித்தம்பி.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின்  எல்லைக்கிராமமாக கச்சக்கொடிசுவாமிமலை அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள்தான் மாவட்டத்தின் எல்லையினைப் பாதுகாத்து வருவதுடன், நாள்தோறும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின், பிரதேசத்தின் எல்லைக்கிராமமாக இக்கிராமம் அமைந்துள்ளது. அதேவேளை காடுகளை சூழவே இக்கிராமம் அமைந்துள்ளமையினால், நாள்தோறும் யானைத்தாக்குதலுக்கு ஆளாகின்ற, அஞ்சிவாழ்கின்ற மக்களாக இக்கிராமத்தவர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள மக்கள் தமது சேவைகளை பெறுவதற்கும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொக்கட்டிச்சோலை நகரத்திற்கே சமுகம் கொடுக்கவேண்டிய நிலையும் இருக்கதான் செய்கின்றது. இதன்காரணமாக இவற்றிற்காக இவர்கள் ஒருநாள் பொழுதினை கழிக்கவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளமையினையும் மறைக்க முடியாது. இங்குள்ள மக்கள் தேவை கருதி வேறு இடங்களுக்கு சென்றாலும், மாலை 5மணிக்கு முன்னமே தமது கிராமத்தினை அடைந்துவிட வேண்டும். இல்லாதுவிடின் யானைத் தாக்குதல்களுக்கு ஆளாகவேண்டி ஏற்படும் என்பதனையும் ஞாபகமூட்டாமல் இருக்கவும் முடியாது. போக்குவரத்து என்கின்ற போது, கொக்கட்டிச்சோலை நகரில் இருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக மாத்திரம் போக்குவரத்து செய்வதாகவிருந்தால் அது மழை காலங்களில் சாத்தியமற்றது. ஏன்னெனில் கங்காணியார் குளத்தினை கடந்தே கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறாயின் மழைகாலங்களில் குளம் நிரம்பிவிடும். குளத்தின் வான்கதவு திறந்துவிடப்படும் கால்வாயின் ஊடாக நீர் வழிந்தோடும் இதனால் போக்குவரத்து தடைப்படும். கால்நடையாக செல்பவர்கள் மாத்திரம் குளக்கட்டின் மீதால் நடந்துசெல்ல முடியும். தனிமையில் செல்வதென்பதும் அச்சத்தினையே கொடுக்கும். கொக்கட்டிச்சோலை நகரத்திற்கோ அல்லது பிரதேச செயலாளர் செயலகத்திற்கோ சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செல்வதற்கான இலகுவான பாதையும் இதுவேயாகும். இதற்கு குளத்திற்கு அருகில் பாலமொன்றினை அமைப்பதன் பயனாக இவ்வீதியினை எப்போதும் பயன்படுத்தக்கூடியதாகவிருக்கும்.
கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை வீதியினைவிட்டு குறித்த கிராமத்திற்கு செல்வதற்கு இன்னும் சில வீதிகள் இருக்கின்றன. அவ்வீதிகளினூடாக வெல்வதாயின் அருகில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களினை கடந்தே செல்லவேண்டும். அவைகளில் சிலவற்றினை வீதியென்று சொல்வதைவிட அங்குள்ள மக்கள் வண்டு என்றே சொல்வார்கள். ஏனெனில் நீரோடும் பெரியளவிலான வாய்க்கால்களின் தடுப்புசுவர்களாகவே அவை இருக்கின்றமையினை அவதானிக்கமுடியும். இதைவிடவும் வெல்லாவெளி பாடசாலையின் அருகாக செல்கின்ற வீதியின் ஊடாக சென்று அம்பாறை பிரதான வீதிக்குச் சென்று அங்கிருந்து கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு வருகைதர வேண்டும்.
இவ்வீதியினால் வருவதாயின் அதிக தூரம் பயணிக்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்திலும் சிரமங்களை எதிர்கொள்கின்ற இம்மக்கள், சேனைப்பயிர்ச்செய்கைகளையும், வேளாண்மையினையும், மாடுவளர்ப்பினையும் செய்துகொண்டு வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்கின்ற மக்களுக்கு குடிநீரும் சாவாலானதொன்றே. கோடை காலங்களில் குடிநீருக்கு மக்கள் அலையும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பிரச்சினைகளுடன், அங்காங்கு மேடுகளில் வீடுகளையும், குடிசைகளையும் அமைத்து வாழ்கின்ற இக்கிராமத்து மக்களை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் குடிசைகள் இன்றி, கல்வீடுகளிலே வாழ்கின்ற சூழலினை தற்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் ஊடான நிதியுடனும், மக்களின் பங்களிப்புடனும் மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகத்தின் தெரிவுடனும் கச்சக்கொடிசுவாமி மலையில் கணிபதிபுரம் என்ற பெயருடன் 25வீடுகளைக் கொண்ட மாதிரிக்கிராமம் அமையப்பெற்றுள்ளது. வெறுமனே வீடுகளை மாத்திரம் அமைத்துக்கொடுக்காமல், வீடுகளுக்கான மின்சார வசதி, நீர்வசதி, பிரவேசப்பாதை, உள்ளகப்பாதை போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளன.
சொந்தவீடுகள் இல்லாத, குடிசைவீட்டில் வாழ்ந்த, பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்த மக்களிற்காக இவ்வாறான வசதிகளுடன் வீடுகள் அமைத்துக்கொடுப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதென இங்குள்ள மக்களும் பேசிக்கொள்கின்றனர். இத்தோடு இம்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக யாரும் கருதவும் முடியாது. இம்மக்களின் தேவைகள் இன்னமும் உள்ளன. அவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக மேய்ச்சல், வீதி, போக்குவரத்து, பாடசாலைக்கான ஆளணி இன்மை, மீனவர்களுக்கான பிரச்சினைகள், தொழில்வாய்ப்பு போன்றனவும் செய்துகொடுப்பட வேண்டியதும் அவசியமானதொன்றே. பிரதேசசெயலகம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கதொன்றாகவுள்ளதோடு, இன்னமும் பல மாதிரிக்கிராமங்கள் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கதே. இக்கிராமத்தின் வளர்ச்சிகுறித்தும், தேவைகுறித்தும் அறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதும் அனைத்து பொறுப்புவாய்ந்தவர்களின் கடமையும் கூட எனக்கூறியவனாக கங்காணியார்க் குளக்கட்டில் இருந்து தாந்தாமலை நோக்கி தனது பயனத்தினை ஆரம்பித்தான் அழகுதுரை.