படுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்

– படுவான் பாலகன் –
வாரத்தின் இறுதிநாட்களில் படுவான்கரைப் பிரதேசத்தில் உதைபந்தாட்டத் திருவிழாதான் என்கிறார் ஜீவிதன். மணற்பிட்டி சந்தியில் நின்ற கணசேன் காஞ்சிரங்குடா பக்கமாவிருந்து வருகைதந்த ஜீவிதனை இடைநிறுத்தி இந்தக்கிழமை விளையாட்டில் எந்த கழகம் வென்றது எனவினவினான். அதனைத்தொடர்ந்து இருவரும் விளையாட்டுப்பற்றிய தமது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தனர்.
நீண்டு பரந்துகிடக்கின்ற படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள, இளைஞர்கள் அதிகம் ஈடுபாடு காட்டும் விளையாட்டாக உதைபந்தாட்டம் உள்ளது. தமக்கு கிடைத்திருக்கின்ற வளங்களை பயன்படுத்தி ஊருக்கொரு மைதானத்தினை அமைத்து, அல்லது திடல்கள், வயல்வெளிகளில் மாலைப்பொழுதில் தாம் பார்த்த உதைபந்தாட்டப் போட்டியை விளையாடி வருகின்றனர். படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கழகங்களும் தமக்குகிடைக்கின்ற வசதிக்கேற்ப சனி, ஞாயிறு தினங்களில் உதைபந்தாட்டப்போட்டியினை நடாத்தி வருகின்றனர். இப்போட்டி நிகழ்வுகள், இருநாள் திருவிழா போன்றே நடந்தேறி வருகின்றன. வருடத்தின் இறுதிப்பகுதியிலும், முதற்பகுதியிலும் பெய்கின்ற அடைமழையான காலப்பகுதியினை தவிர்த்து ஏனைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படுவான்கரைப்பகுதியில் உள்ள ஏதோவொரு கிராமத்தில் உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றுதான் ஆகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு படுவான்கரைப்பிரதேசத்தில் குறிப்பிட்டளவிலான கழகங்கள் மாத்திரமே விளையாடியும் வந்தன. இப்போது பல கழகங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஒரே கிராமத்தில் பல அணிகளும் உள்ளன.
படுவான்கரைப்பகுதியில் உள்ள இளைஞர்களைப் பொறுத்தவரை சனி, ஞாயிறு தினங்கள் என்றாலே மகிழ்ச்சியான நாளாக கருதுவதுடன், விளையாட்டு நடைபெறும் இடங்களைத் தேடிச்செல்கின்றனர். இதன்மூலமாக உதைபந்தாட்டப் போட்டியில்  இளைஞர்கள் கொண்டுள்ள ஈடுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது. விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற ஆதங்கமும், ஏனைய கழகங்களை வெல்ல வேண்டுமென்ற மனநிலையும் திடமாக கொண்டுள்ளனர். இதனால் தமது உடலங்கங்களையும் கருதாது, விளையாடி, அதன்மூலமாக கால்முறிவு, கைமுறிவு போன்ற பல்வேறு உபாதைகளுக்கும் ஆளாகியுமுள்ளனர். ஆனாலும் விளையாட்டிலிருந்து விலகியிருப்பதற்கு மனமில்லாதவர்களாகவே இருக்கின்றனர். இவ்விளையாட்டிற்கான ரசிகர்களும் படுவான்கரைப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். வார இறுதிநாட்களைத் தவிர ஏனைய நாட்களில் ஏதோவொரு தொழிலினை செய்துவிட்டு வார இறுதியில் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு விளையாட்டு வீரர்கள் பற்றி மௌனகுரு கூறினான்.
மைதானங்களைப்பற்றி கூற ஆரம்பித்த ஜீவிதன், மைதானங்கள் பல கிராமங்களில் அமைந்துள்ளதுதான், ஆனாலும் உதைபந்தாட்ட மைதான அளவிற்கு ஏற்ப, ஒருசில மைதானங்களே அமையப்பெற்றுள்ளன. மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதிவசதிகள் இன்மையே மைதானங்கள் முறையாக அமைக்கப்படாமைக்கும் காரணமாகின்றது. படுவான்கரைப்பிரதேசத்தில்  உள்ள பெரும் மைதானமாக மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இவ்விளையாட்டு மைதானத்தில் சில வேலைகள் நடைபெற்றிருக்கின்றதே தவிர, குறிப்பாக சுற்றுமதில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முற்றுப்பெறவில்லை. இம்மைதானத்தினை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்றுவதற்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்யவேண்டியுள்ளது. அவ்வாறான அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்கின்ற போது, மாவட்டத்தில் சிறந்த மைதானமாகவும் மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானம் மாற்றமுறுவதற்கும் சந்தர்ப்பமுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டியதும் காலத்தின் தேவையுமாகும்.
படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்து, படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கு உதைப்பந்தாட்டப்போட்டியின் நுட்ப பயிற்சிகளை வழங்குகின்ற போது சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கமுடியும். இங்குள்ள விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்களாகவிருந்தும் நுட்பமுறையில் தவறிழைக்கின்றமையினாலேயே இவர்களது திறமைகளும் மைதானங்களுக்குள்ளேயே மழுங்கடிக்கப்படுகின்றன. அவ்வாறு பயிற்சி அளிக்கின்ற போது, தேசியமட்ட அணிகளிலும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்வர்.
விளையாட்டு ரீதியாக தேசிய, மாகாணமட்டங்களில் சாதிக்கின்ற போது, வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை பெறுவர். இதன்மூலமாக தமது குடும்ப வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்வதற்கான இலகு வழியினைப்பெற்றுக்கொள்வர். இன்று உதைபந்தாட்ட நடுவர் சம்மேளனங்களில் நடுவர்களாக இருப்பவர்கள் அனேகர் நகர்புறத்தினை அண்டியவர்களாகவே உள்ளனர். இதற்கு படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்கியமை குறைவே காரணமாகும். ஆனாலும், தற்காலத்தில் நடுவர்களுக்கான பரீட்சைகளை எழுதி அவற்றிலே சித்தியடைந்து பயிற்சி நடுவர்களாக கடமையாற்றுகின்றனர். காலப்போக்கில் பலர் இன்னும் நடுவர்களாக உருவாவதற்கு சந்தர்ப்பமுள்ளது. இந்நிலையில் படுவான்கரைப்பிரதேசத்தில் தோன்றியுள்ள கழகங்களையும் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி, மைதானங்களையும் அபிவிருத்தி செய்து, விளையாட்டு உபகரணங்களையும் வழங்குகின்ற போது சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிவதோடு, ஆரோக்கிய சமுகத்தினையும் உருவாக்க முடியும் எனக்கூறியவனாக ஜீவிதன் அவ்விடத்திலிருந்து அகன்றான்.