முதலூர் முழக்கத்தினை வென்றது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா

முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம், 58வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடாத்திய, “முதலூர் முழக்கம்” உதைபந்தாட்டப் போட்டியில் முதலிடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி பெற்றுக்கொண்டது.

முதலைக்குடா மகா வித்தியாலய மைதானத்தில் சனி(29), ஞாயிறு(30) தினங்களில் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டியில், 29அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரும், மகிழடித்தீவு மகிழை அணியினரும் தெரிவாகியிருந்தனர்.

இறுதிப்போட்டிக்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினர் ஒருகோளினை இட்டு முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டனர். இதனை எதிர்த்தாடிய மகிழடித்தீவு மகிழை அணியினர் இரண்டாம் இடத்தினையும், கரையாக்கன்தீவு காந்தி அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

விளையாட்டுக்கழகத்தின் தலைவர் க.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களும், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த பந்துக்காப்பாளர் ஆகியோருக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் பொ.கோபாலபிள்ளை, பாடசாலைகளின் அதிபர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.