போராளிகளுக்குஅரசியற் தலைமைத்துவத்தைப் பகிந்து கொள்ள அவர்கள் அரவணைக்கப்படல் வேண்டும்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டு நிகழ்வின் ஒரு அம்சமான வாலிபர் முன்னணி தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் போது வாலிபர் முன்னணியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாலிபர் முன்னணியின் செயலாளர் சுரேன் அவர்களால் வெளிப்பகர்வு செய்யப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பித்த 1949ம் ஆண்டில் தீர்மானித்த தமிழீழ தேசிய இனத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னனெடுப்பது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்யும் வகையில் 2002ம் ஆண்டில் எய்தப்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் கூறப்பட்டபடி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் சமஷ்டிக் கட்மைப்பில் அரசியற் தீர்வொன்றை வலியுறுத்திக் கோரல்.

ஐநா மனித உரிமைத் தீர்மானம் 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் த.தே.கூட்டமைப்பின் உன்னத வகிபாகத்துடன் நிறைவேறப் பெற்ற ஐநா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் குறிப்பாக 30ஃ1 மற்றும் 34ஃ1 ஆகிய தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

காலங்காலமாகச் சிங்களப் பேரினவாத சிந்தனை கொண்ட இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், காணிப் பறிப்புகள் மற்றும் ஏனைய உரிமைப் பறிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் தமிழ்த் தேசிய இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள் ஒரு தேசிய இனத்தை காப்பாற்ற வேண்டிய அரசே அந்த இனத்தை அழித்தது என்ற வரலாற்றைப் பதிவு செய்வதுடன் இது ஒரு இனவழிப்பு என்பதையும் உறுதி செய்தல்.

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் குடும்பங்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும், நீண்டகாலமாக விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான துரித செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் அதற்கான தொழில் துறைகளையும் அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் போன்றவை எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், அனாதரவானவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தமிழின விடுதலைப் போரில் ஈடுபட்ட போராளிகளின் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என்பன மீளக் கட்டியெழுப்பப்படவும், ஜனநாயக அரசியல் சமூக நீரோட்டத்தில் கலந்து வாழவும் அரசியற் தலைமைத்துவத்தைப் பகிந்து கொள்ளவும் அரவணைக்கப்படல் வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி தொடர்பில் விவசாயத்துறை, மீன்பிடித்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொழில்களை உருவாக்குவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பால் பண்ணைகள், முந்திரிகைச் செய்கை, பனைவளத்தை முழுமையாக சமூக மேம்பாட்டுக்கேற்ற வகையில் பயனுறுத்த வேண்டும்.

கல்வித்துறையில் இராணுவத் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும்.

தரத்திற்கேற்ப அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், வர்த்தகத்துறைகளில் கல்வி, பயற்சி ஆராய்ச்சியிலும், பல்கலைக்கழக தொழில்நுட்பத்துறையில் 65% மாணவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பதுடன், 75% மாணவர்கள் அந்த அந்தப் பிராந்தியங்களில் இருந்து உரிய பிராந்தியப் பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கலைத்துறைப் பட்டதாரிகளுள்ளிட்ட அனைத்தத் துறையினருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இனத்தின் விடுதலைக்காக, அடிமைத்தனத்திற்கு எதிராக, சுதந்திர வாழ்வுக்காக இலட்சக் கணக்கான உயிர்களைப் பலியிட்டு ஆகுதியாக்கிய தமிழ் மக்களின் கட்டமைப்புகளைச் சீர்குலைத்து, இளைஞர்களைச் சீர்குலைத்து அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கு வடக்கு கிழக்கில் போதைப் பொருள் பாவனை ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதுடன், எமது சமூகம் போதைப் பொருள் பாவனைக்கும், வர்த்தகத்துக்கும் எதிராக விழிப்புணர்வையும், பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு உறுதிபூண வேண்டும்.

என்று அத் தீர்மானப் பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.