மைத்திரியின் கோமாளிக்கூத்து இன்னும் 5 மாதங்களே தொடரும்

19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம், எங்கள் மீதும் கோபம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது அவர், தனக்குத் தெரியாமல் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று பொய்யுரைக்கின்றார். இது அவரின் கோமாளிக்கூத்தாகும். இந்தக் கூத்து இன்னமும் 5 மாதங்களுக்குத்தான் தொடரும். அதன்பின்னர் எல்லாம் முடிவுக்கு வரும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

துரித கிராம அபிவிருத்தித்திட்ட நிதி மூலம் கரவெட்டி, இடைக்காடு, புதுத்தோட்டம் விநாயகர் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட வெளிமண்டபத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பாரிய வெற்றி. அதை நான் செய்து முடித்தேன் என்று பெருமை பாராட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அது ஓர் அரசியல் சூழ்ச்சி; தனக்குத் தெரியாமல் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதிலே என்னுடைய பெயரையும் அவர் தூக்கிக்காட்டியுள்ளார். அதைத் தயாரித்ததில் நானும் ஒருவன் என்று அவர் சொல்லியிருக்கின்றார்.

அதைத் தயாரித்தவர்களில் நான் ஒருவன் அல்ல. அவர் தெரியாமல்தனத்தால் அந்தப் பெருமையை எனக்குத் தந்தார். அது ஒரு விதத்தில் எனக்கு நல்லம். ஏனெனில் 19ஆவது திருத்தம் மிகவும் நல்லதொரு திருத்தம்.

அதை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன் என்று சொன்னால் அது சரி.

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டபோது ஜனாதிபதியின் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்டவர்களில் நானும் ஒருவன்.

நீதிமன்றத்திலேயே இதற்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தரப்பு வாதிட்டது. இது தன்னார்வத் தொண்டர்களினால் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்று மஹிந்த தரப்பு சொன்னபோது, இல்லை இது பொலனறுவையில் இருந்த வந்த ஒரு விவசாயியின் மகன் கொண்டுவந்த திருத்தம் என்று உயர்நீதிமன்றத்தில் நான் தெரிவித்தேன்.

ஆனால், அந்த விவசாயியின் மகன் இந்தத் திருத்தம் இப்போது என்னுடையது அல்ல; இது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கொண்டுவந்த திருத்தம் என்று பலவாறாகப் பொய்யுரைக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து எமக்குப் பாரிய சவால்மிக்க விடயம் அல்ல. இது அவரின் கோமாளிக்கூத்தாகும். இந்தக் கூத்து இன்னமும் 5 மாதங்களுக்குத்தான் தொடரும். அதன்பின்னர் எல்லாம் முடிவுக்கு வரும்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் திடீரென்று குத்துக்கரணம் அடித்து தன்னுடைய பழைய உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட்டார் ஜனாதிபதி. அதனை நீதிமன்றத்தின் ஊடாக நாம் முறியடித்துவிட்டோம். அதனாலே எங்கள் மீது அவருக்கு இன்னமும் கோபம் இருக்கின்றது.

இந்த 19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதிக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம். எங்கள் மீதும் கோபம்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்தான் இந்த 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் அன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஆதரவு வழங்கினார்கள்.

இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இதற்கு இணக்கம் தெரிவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்புடன் பேச்சு நடத்த 4 பேர் கொண்ட குழுவை தனது சார்பில் ஜனாதிபதி நியமித்தார். நானும், ரவூப் ஹக்கீமும், அநுரகுமார திஸாநாயக்கவும், அஜித் பி பெரேராவும் அந்தக் குழுவில் அங்கம் வகித்தோம்.

மஹிந்த தரப்புடன் பேசி 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றித் தருமாறு ஜனாதிபதி எம்மிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க ஜனாதிபதி சார்பில் மஹிந்த தரப்புடன் நாம் பேச்சு நடத்தினோம். ஒவ்வொரு நாளும் இரவு நாம் ஜனாதிபதியைச் சந்திப்போம். மஹிந்த தரப்புடன் பேசப்பட்ட விடயங்களை ஜனாதிபதியிடம் தெரிவிப்போம். நள்ளிரவு வரை ஜனாதிபதியுடனான எமது சந்திப்பு தொடரும். இதன்பிரகாரம்தான் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது வாய்க்கு வந்த மாதிரி ஜனாதிபதி பொய்யுரைக்கின்றார். எல்லாம் விரைவில் முடிவுக்கு வரும்” – என்றார்.