வடக்கு, கிழக்கு பட்டதாரிகளை ஏனையவர்களுடன் ஒப்பிட வேண்டாம்

வடக்கு, கிழக்கு பட்டதாரிகளை ஏனைய பிரதேசத்திலுள்ளவர்களுடன் ஒப்பிடாது விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும் என்று   இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற வகையில் விகிதாசாரத்திலோ விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும்.

திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (27) மாலை நடைபெற்ற நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தொண்டராசிரியர்கள் கடந்த காலங்களில் யுத்தத்திற்கு முன்னர், யுத்தத்துக்குப் பின்னர் எந்தவித வேதனமும் இன்றி தங்களுடைய குடும்பங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கடமைகளைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு நல்லாட்சி அரசு இரண்டு தடவைகள் நியமனத்தை வழங்கியிருக்கிறது.

இன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போராடிய தொண்டராசிரியர்கள் 811பேரில் 739பேருக்கு நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள்.வடமாகாணத்தில் இருந்து 350ஆசிரியர்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து அபிவிருத்திகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டங்களில் கடந்த மார்ச் மாதத்தில் 200பாடசாலைகளில் கட்டடங்களைத் திறந்து வைத்திருக்கிறோம். அடுத்த மாதத்தில் 250பாடசாலைகளின் கட்டடங்களைத் திறந்து வைக்க விருக்கின்றோம். இதே போல வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ், வடக்குக்கு 5000மில்லியன், கிழக்கு மாகாணத்திற்கு 6500மில்லியன் ரூபாவரை செலவிட்டுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் பிரதமர் செயலகத்தின் ஊடாக தேசிய கொள்கை அமைச்சின் ஊடாக 7500 நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் வடக்குக் கிழக்கு, மலையகத்தில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளை விகிதாசாரத்திலோ எண்ணிக்கையிலோ கூடுதலான வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரின் கவனத்திற்குக் கொண்ட வரவிரும்புகிறேன் என்றார்.