அம்பாறையில் 11வருடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதிலுயிள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு  மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டுப் போய் இருந்த நிலையில் சுமார் 11வருடங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சனிக்கிழமை திருக்கோவில் பொலிசார் கண்டு பிடித்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

 

குறித்த  மோட்டார் சைக்கிளானது கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி தம்பட்டையில் வாகன உரிமையாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொள்ளையிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ள போதிலும் மோட்டார் சைக்கிளும் அதனை கொள்ளையிட்ட நபர்களும் கைது செய்யப்படவில்லை

 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை(29) திருக்கோவில் பொலிசாருக்கு மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்றப் புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய பொலிஸ் குழுவினர் விரைந்து சென்று விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சந்தேக நபரைக் கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியுள்ளன.

 

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாகத் திருக்கோவில் பொலிசாரின் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.