அரச உத்தியோகத்தர்களின் ஆடை விவகாரம் : புதிய சுற்று நிருபம் வெளியீடு

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இன்று இப்புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

எனினும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பல்வேறு தரப்பினாலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இதனால் குறித்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அரச அலுவலகங்களில் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சினால் முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயமே எதிர்ப்புக்களுக்கு காரணமாக அமைந்தது.

வெளிவேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.