சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு 75 வயது. திடீர் சுகயீனமுற்ற இவரை மத்துகமயிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இவரின் பூதவுடல் பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய எஸ். தில்லைநாதன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியவர்.

தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். பாராளுமன்றச் செய்திகளை நேர்த்தியுடன் தொகுத்து ஒலிபரப்பிய தில்லை, இலங்கை வானொலி ரசிகர்களால் நன்கு நேசிக்கப்பட்ட ஓர் ஊடகவியலாளர்.

1944ம் ஆண்டு பிறந்த சிவபாக்கியம் தில்லைநாதன் என்ற இயற் பெயரைக் கொண்ட இவர், வீரகேசரி பத்திரிகையில் இணைந்து தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

அச்சு ஊடகத்துறையிலிருந்து விலகிய எஸ். தில்லைநாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ் எப். எம். வானொலியான :எப்.எம்.-99′ வானொலியை ஆரம்பித்து, அதன் பணிப்பாளராக நீண்டகாலம் செயற்பட்டார்.

இதன் மூலமே ‘எப். எம்- 99 தில்லை’ என நண்பர்களால் அழைக்கப்பட்டார். ‘எப். எம். – 99’ வானொலியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப் பிரிவில் பணிபுரிந்தார். இதன் பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார்;

2014 இறுதிப் பகுதியில் ஓய்வுபெற்ற இவர், மரணிக்கும் வரை ஊடகப் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டார். இவருடைய சேவையைப் பாராட்டி இலங்கை பத்திரிகைப் பேரவை ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தணிக்கை சபை, பத்திரிகைப் பேரவை ஆகியவற்றின் மிக நீண்டகால உறுப்பினராகவும் தில்லைநாதன் பணியாற்றினார்.