முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை – இராணுவத் தளபதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் முன்னிலையில் நேற்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சாட்சியம் அளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து ஏப்ரல் 26 ஆம் திகதி இஷான் அஹமட் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொலைபேசி ஊடாக தன்னிடம் விசாரித்ததாக இராணுவத்தளபதி சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டார். விசாரணைக் குழுவினரின் கேள்விகளுக்கு பதில் அளித்த இராணுவத்தளபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும் இராணுவம் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறான தாக்குதலுக்கு கால எல்லை இல்லை. நீண்டகால திட்டங்களில் இது இடம்பெறக்கூடும். அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளோம். இந்த அச்சுறுத்தல் உள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பிலும் கூட நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.  விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அந்த அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு சில தலைவர்கள் சரணடைந்த பின்னரும் மேலும் பலர் சரணடைந்த பின்னர் அந்த அமைப்பு அப்படியே வீழ்ச்சிகண்டு விட்டது.

ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வாறு குறிப்பிடமுடியாது என்றும் கூறினார். தற்போதைய நிலைமையில் தீவிரவாதம் இலங்கையில் நீடித்திருப்பதற்கான அடையாளம் இல்லை இது முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும் கூறமுடியாது என்றும் சுட்டிக்காட்டினார். 26ஆம் திகதி, இஷான் அஹமட் என்பவரை நாம் தெஹிவளையில் வைத்து கைது செய்திருந்தோம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை கைது செய்தீர்களா என என்னிடம் கேட்டார். அதற்கு நான் தெரியாது என்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையால் குறிப்பிட்டு யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

பின்னர் இரண்டாவது முறையாக எனக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது, இன்னும் நான் இது குறித்து தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தேன். இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் நான் இதுகுறித்து கேட்டபோது, குறித்த பெயர் கொண்டவரை கைது செய்துள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதன் பின்னர், மீண்டும் ரிஷாத் பதியுதீன் எனக்கு அழைப்பினை ஏற்படுத்திய போது, அவ்வாறான ஒருவரை கைது செய்துள்ளோம் என்று கூறினேன்.

அமைச்சர் ஒருபோதும் குறித்த நபரை விடுவிக்க வேண்டும் என என்னிடம் கூறவில்லை. இது தவிர எந்தவொரு அரசியல்வாதியும் உயர் அதிகாரியும் என்னிடம் கதைக்கவில்லை. இப்போதுவரை எனது செயற்பாட்டை மேற்கொள்ள எந்தவொரு தரப்பும் அழுத்தம் விடுக்கவில்லை என்றும் விபரித்தார். ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எமது இந்த நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிநதுள்ளது.

கடந்த 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் போதும் இப்போதும் உள்ள நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு இராணுவத்தளபதி தொடர்ந்தும் பதிலளிக்கையில் , தற்போதைய பயங்கரவாதம் என்பது சர்வதேச பயங்கரவாதமாகும். அதற்கே நாம் முகங்கொடுத்துள்ளோம். தெரியாத எதிரிக்கெதிரான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம் . இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாத தாக்குதலை விட மாறுபட்ட ஒன்றாகும்.

முப்படை மற்றும் பொலிஸ் இணைந்து இந்த பயங்கரவதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் இந்த பயங்கரவாதம் முடிந்து விட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இறுதி வரை போராடிக் கொண்டிருக்கின்றோம். அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்த எமக்கு அதிகாரம் உள்ளது.

முன்னர் இருந்த நிலைமையை விட இப்போது முப்படை மற்றும் பொலிஸ் இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பேச முடிகின்றது. ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புக்கூட்டம் புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது அதுவும் சர்வதேச நாடுகளுடன் உள்ள தொடர்பும் இந்தியாவின் ஒத்துழைப்பும் எமக்கு பலமாக இன்று அமைந்துள்ளது என்றும் கூறினார்.

பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் சில பின்னடைவுகள் இருக்கலாம் ஆனால் எவ்வாறு இருப்பினும் மீண்டும் ஒன்றிணைந்து பலமாக எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளை கட்டியெழுப்ப வேண்டிய தேவையே எமக்கு உள்ளது. முதல் இரு நாட்களில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைப்புகளை கண்டறிந்து நபர்களை கைதுசெய்யவே காலதாமதம் ஆகி விட்டது என்று தெரிவித்தார்.

இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தி வைத்துள்ளோம். பலப்படுத்தியும் உள்ளோம். ஆனால் இந்த பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் கூற முடியாது. இந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது.

விடுதலைப்புலிகளை கூட நாம் இன்னமும் தேடிக்கொண்டுதான் உள்ளோம். அவர்களும் இன்றும் சில சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.