உணவு தொடர்பான நோய்களால் உலகில் வருடாந்தம் 125,000 மரணம்

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ​முதல் நடைமுறைப்படுத்தப்படுமென,  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உணவுச் சட்டத்தின் கீழ், இதற்கான அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. உலக உணவு பாதுகாப்பு தேசிய தின நிகழ்​வையொட்டி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்ட மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே, அவர் இதனைத் தெரித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில், 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், உணவு பாதுகாப்புத் தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

வருடம் தோறும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.  உலக உணவு தினத்தின் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளானது, ‘உணவு பாதுகாப்பானது சகலரினதும் கடமை’ என்பதாகும்.  தரமான உணவு  நிலையான வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் அத்தியாவசியமானது. பாதுகாப்பற்ற உணவுகள் உடலுக்கு தீக்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாது,  பல நோய்களையும் ஏற்படுத்திவிடும் .

உலக சுகாதார அமைப்பு, இந்த விடயம் தொடர்பில் கணிப்புகளை முன்னெடுத்துள்ளது. அக் கணிப்பீட்டுக்கமைய, பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால், வருடாந்தம் மில்லியன் கணக்கானோர் உலகில் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உணவு தொடர்பான நோய்களால் வருடாந்தம் 125,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். எமது நாட்டை பொருத்தவரை உணவுப் பாதுகாப்பானது, கடுமையான சவாலுக்குட்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.