பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாக வாக்குவாதம்-நிந்தவூர் பிரதேச சபை அமர்வில் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான்

பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் முன்மொழிவு விடயங்களில் சரியான நடவடிக்கை எடுக்கபடாது விட்டால் ஆட்சி அதிகாரத்திற்கான ஆதரவினை விலக்க நேரிடும்  என தெரிவித்தனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் 15 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை (27) காலை 10.20 மணியளவில் பிரதிதவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மத அனுட்டானங்களுடன் ஆரம்பமான பின்னர் 2019 மே மாதத்திற்கான கூட்டறிக்கை சபை அங்கீகாரத்திற்காக விடப்பட்டது.இதன் போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகம்மட் தம்பி சப்றாஸ்  ஆமோதிக்க மேற்படி கூட்டறிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உறுப்பினர் எம்.எம் சம்சுதீன் வழிமொழிந்தார்.தொடர்ந்து 2019 மே மாதத்திற்கான கணக்கறிக்கை அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.இதற்கமைய சபையில் இருந்த உறுப்பினர்கள் ஆமோதித்தும் வழிமொழிந்தும் கணக்கறிக்கையை அங்கீகரித்தனர்.

மேற்குறித்த இரு அறிக்கைகளும் சபையில் அங்கீகரிப்பிற்கு சபையில் விடப்பட்டபோது சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சபையை வழிநடத்திய பிரதி  தவிசாளர் பிரதேச அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான முகமட் தம்பி சப்றாஸ், ஏ.அலிஹான், எம்.எம் அன்ஸார், சட்டத்தரணி றியாஸ் ஆதம், கே.எம்.எம். ஜாரீஸ், எம். ஐ பாத்திமா றிஹானா ஆகியோர் தமது முன்மொழிவுகளுக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதன் போது பதிலளித்த பிரதி தவிசாளர் முன்மொழிவிற்கான பணம் போதாமையினால் அவற்றை சரியாக முன்னெடுக்க முடியவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டார். அதனை ஏற்றுக்கொள்ளாத மேற்படி உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாகவும் பொறுப்புணர்வின்றி பிரதி தவிசாளராகிய நீங்கள் சமத்துவமாக சகல உறுப்பினர்களது முன்மொழிவுகளுக்கு கட்சி பேதம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர் .
இதனை செவிமடுத்த பிரதி தவிசாளர் இனிவரும் காலங்களில் சகல உறுப்பினர்களது முன்மொழிவுகளையும் அங்கீகரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து சபை வழமை நிலைக்கு வந்தது.

தொடர்ந்தும் தவிசாளரின் உரை ஆதன அறவீடுகள் சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினரின் வசம் உள்ள அவர்கள் பயன்படுத்தும் பழைய பிரதேச சபையின் மின் கட்டணணம் தொடர்பாக உறுப்பினர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்ட்டது.

அடுத்து உறுப்பினர்களின் வழமையான முன்மொழவுகள் சில சபையில் எடுக்கபட்டு இறுதியாக சபைக்கு புதிதாக வந்திருந்த உறுப்பினரின் உரையுடன் சபை சிறிது நேரத்தின் பின்னர் நிறைவடைந்தது.

சபைக்கு புதிய உறுப்பினராக நிர்தவூர் 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஆதம்பாவா ரிபானா என்பவர் வருகை தந்திருந்தார்.இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 ஆம் வட்டார உறுப்பினரான திருமதி நூர் முஹம்மது வசீரா என்பவர் இராஜனாமாச் செய்ததை அடுத்து எழுந்த வெற்றிடத்திற்கு தெரவானமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் 6 உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினருமான மொத்தம் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஏம்.எம் தாஹீர் தவிசாளராக இருப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் வை.எல் சுலைமாலெப்பை உப தவிசாளராகவும் உள்ளார்.மேற்படி சபை நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.