முன்னாள் ஆளுனர் பற்றி கூறுபவர்கள், அவருடன் இணைந்து வாக்குகேட்பர் : ஞா.சிறிநேசன்

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஜ் பற்றி கூறுபவர்கள் நாளை அவரின் கட்சியுடம் இணைந்து வாக்குக்கேட்கவருவார்கள். அன்று, இன்றுபோடும் நாடகங்கள் வெளிச்சத்திற்குவரும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் வாக்குகளினால்தான் முன்னாள் ஆளுனர் நாடாளுமன்றத்திற்கும், உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் எனவும் கூறினார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கூறுகையில்,
தப்பான கணிப்புக்கள், தவறான முடிவுகள் சில விசமிகளால் பரப்பப்படுவதுண்டு. அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக சிலர் சிலவேளைகளில் தவறாக புரிந்து கொள்வதும் உண்டு. வெளிப்படையாக உரையாடுகின்ற, கையாளுகின்ற போது உண்மைகளை விளங்கிக்கொள்ளலாம்.

அரசியல் போட்டி, குரோதம், காழ்ப்புணர்வுகள் காரணமாக எமது கட்சியில் இருந்து பாய்ந்து சென்றவர்கள் தமது வாக்குவங்கிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக பொய்யான, புரட்டான தகவல்களை பரப்பி வருகின்றார்கள்.

மிகவும் கடுமையான பேரினவாத போக்குடையவர்களோடு கைகளை கோர்த்துக்கொண்டு, தமிழ்மக்களின் நலன்களைப் பேணுவதைப்போன்று பாசாங்கான செயற்பாடுகளை சிலர் செய்துகொண்டிருக்கின்றனர். அரசியல் சாசனம் பற்றிய விடயம் தீர்த்து வைப்பதற்கு முன்பாக பாராளுமன்றத்தினை குழப்பியடித்து சதிமூலமாக ஆட்சியை கைப்பற்றியவர்களுடன் சேர்ந்து அந்த சலுகைகளுக்காக இணைந்தவர்கள் தமிழ்மக்களின் தேவைகளை, உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையிலும் இலாகிக்கி அற்றவர்கள்.
சிலரை சில நாட்களில் ஏமாற்றலாம். பலரை பல நாட்களில் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது, வெறுமனே ஆக்குரோசமான, வெறித்தனமான கருத்துக்களால் எதனையும் சாதிக்க முடியாது. சமயோசிதமாகவும், சாதுரியமாகவும், சாணாக்கியமாகவும் செயற்படுவதன் மூலம்தான் எமது செயற்பாடுகளில் வெற்றி காணமுடியும்.
இன்றொரு கட்சி, நாளையொருகட்சி, நாளைமறுநாளொருகட்சியென, கட்சிகளைவிட்டு கொள்கையில்லாமல் மாறித்திரிபவர்கள் வெறுமனே உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை கூறி ஏமாற்றி, சுகபோகங்களை அனுபவிப்பார்களே தவிர, மிகவும் பேரினவாத போக்குடைய அமைப்புக்களுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதென்பதெல்லாம் பொய்யான கருத்துக்கள்.
முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஜ் பற்றி கூறுபவர்கள் நாளை அவரின் கட்சியுடம் இணைந்து வாக்குக்கேட்கவருவார்கள். அன்று, இன்றுபோடும் நாடகங்கள் வெளிச்சத்திற்குவரும். என்றார்.