தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர்

திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் பிரதேசத்தில் உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தர முயர்த்தக் கோரி அப்பிரதேச மக்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அரசியல் ரீதியாக மட்டுமன்றி அகிம்சை போராட்டத்திலும் ஈடுபட்டு தமது கோரிக்கைகளை கேட்டு வந்தனர்.
முஸ்லிம்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தின் செல்வ நகர் பகுதி, செருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட பகுதியாகும்.
அதன் காரணமாக கடந்த காலங்களில் அப்பகுதிக்குள் இருக்கும் நீநாகேணி முஸ்லிம்களின் காணி பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலும், காணி உறுதிப் பத்திரம் வழக்கப்படாத நிலையிலும் பல அநியாயங்கள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
புராதன பூமி என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகின்றது. மக்களின் நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிலத்தொடர்போடு காணப்படும் நியாயமான தோப்பூர் பிரதேச செயலக கோரிக்கை இந்த தருணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் அதற்க்கு எமது அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி இன வேறுபாடின்றி முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.