பௌத்த தேரர்கள்திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற தூயநோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படும் போது கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் சகல அதிகாரங்களுடன் இருந்த பிரதியமைச்சர், கிழக்கு முதலமைச்சர் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிரான்குளம் 10ஆம் வட்டார பகுதியில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு வீதிகள் மற்றும் இரண்டு ஆலயங்களுக்கு கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 53 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து கிரான்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பௌத்த தேரர்கள்திறந்த மனதுடன்  தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வருவார்களானால் அவர்களை வரவேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.

இந்த அரசாங்கம் வீழ்த்தப்படுமாக இருந்தால் புதிதாக வருகின்ற அரசாங்கம் எந்தளவிற்கு எங்களுக்கு சாதகமாக இருக்கும் அல்லது உதவிகளை செய்யும் அல்லது எந்தளவிற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஒப்பீட்டு ரீதியாக பார்க்க வேண்டும்.

இருப்பதை உடைத்துவிட்டு இன்னுமொன்று எங்களுக்கு மோசமானதாக இருந்தால் அதனைப் பார்த்து நாங்கள் மனவேதனைப்படுவதில் அர்த்தமில்லை. எனவே அரசியல் சாசனம் என்ற செயற்பாடு இப்போதிருக்கின்ற அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதனை குழப்பியடித்தவர்கள் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். அதற்காக நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முழு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளிலும் குறைபாடுகள் இருக்கின்றன.

தற்போது பெரும் பேசுபொருளாக இருக்கின்ற விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றிய ஒரு தர்க்கம். இது சாதாரணமான ஒரு சிறிய விடயம் என்று நோக்கப்பட்டாலும் கூட அங்கிருக்கின்ற பல்வேறுபட்ட கட்சிகளும் தலைமைகளும் போட்டித்தன்மையான அரசியல் என்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் தற்போதிருக்கின்ற அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கமாக பார்க்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் அடிப்படையில் இரண்டு பிரதான கட்சிகள் இருக்கின்ற போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக செயற்பட்டது. இப்போது அதன் நிலை ஒரு தொங்கு பாராளுமன்றமாகும். இந்த நிலையில் அவர்களிடமிருந்து நாங்கள் சில விடயங்களை பெற்றுக்கொள்வதென்பது கடினமாக இருக்கின்றது.

கடந்த காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை முதற் கட்டமாக கணக்காளர்களை நியமித்து நிதி நிர்வாகத்தினை முழுமையாக அந்த செயலகத்திற்கு ஒப்படைப்பது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

அதற்கடுத்ததாக எல்லைகளை ஓரளவிற்கு நிர்ணயம் செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை உருப்படியாக்குவது என்பதில் இணக்கம் காணப்பட்டது. ஜூன்மாதம் 30ஆம் திகதிக்குள் அதனை முடிக்க வேண்டுமென இணக்கம் காணப்பட்டது. துரதிஷ்டவசமாக ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்று 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பேச்சுகளில் இழுபறிநிலை காணப்பட்டது. அரசாங்கமும் இதனை நியாயப்படுத்தல் செய்ததோடு மட்டுமல்லாது குண்டுவெடிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து சற்று இழுத்துவிட்டது.

இந்த நிலையில் தான் கல்முனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இதல் உண்மையாக நியாயங்கள் இருக்கின்றன என்பதை நாங்கள் மறுக்கவில்லை. பலதடவைகள் பேசியும் கூட நியாயம் கிடைக்காதபடியால் சாத்வீக ரீதியாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

உணர்வு பூர்வமாக சாத்வீக முறையில் ஈடுபட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அந்தப் பகுதியின் புத்த பிக்குவான சங்கரத்தின தேரர் அவர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார். சிறுபான்மை மக்களிற்கான நியாயம் கிடைக்கவில்லை எனக்குறிப்பிட்டு அந்தப் போராட்டத்தில் அவர் இணைந்துகொண்டார். இன்னும் சில சங்கைக்குரிய தேரர்களும் அதில் கலந்துகொண்டார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நியாயமானது என்பதை அங்கிருக்கின்ற பௌத்த குருமார்களும் ஏற்றுக்கொண்டிருப்பது ஓரளவிற்கு திருப்திகரமாக இருந்தாலும் எங்களுடைய இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருகாலத்தில் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பௌத்தகுருமார்களின் பலதடைகள் காரணமாக இருந்தன. வடக்கு கிழக்கை இணைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. ஒற்றையாட்சி என்ற முறைமையை மாற்றியமைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.அதிகமான அதிகாரங்களை வடக்கு கிழக்கிற்கு வழங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

அவர்கள் பரிசுத்தமான ஒரு சிந்தனையோடு இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கக்கூடாது தேசியப் பிரச்சினை இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்கள் செயற்படுகின்ற போது அனைத்தையும் அவர்கள் தீர்க்கக்கூடிய விதத்தில் திறந்த மனதுடன் அவர்கள் வருவார்களானால் அவர்களை நாங்கள் நிறைவாக வரவேற்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்கின்றோம்.

பிரித்தாளும் தந்திரம் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்கி அதனை சாதகமாக பயன்படுத்தி அடுத்த ஆட்சிக்கான பலத்தை சேர்த்துக்கொள்வதற்காக இந்தப் போராட்டங்களை பயன்படுத்துகின்ற சில ஊடுறுவிகளும் இருக்கவே செய்கின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாக வேண்டுமென்ற தூயநோக்கோடு செயற்படுகின்றவர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்ற போது பிழையான கூட்டத்துடன் கூட்டணிகள் அமைத்துக்கொண்ட சிலர் கடந்த காலத்தில் பிரதியமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

முப்பது வருட காலமாக இந்தப் பிரதேச செயலகப் பிரச்சினை இருக்கின்றது. அப்போது அதிகாரத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருந்தவர் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவித குரலும் கொடுக்கவில்லை. இப்போது அந்த இடத்தில் போய் நின்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக குரல் கொடுக்கின்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சராக இருந்தவர் கூட இப்பிரச்சினை பற்றி பேசவில்லை.

இப்போது எங்களுடைய கட்சியிலிருந்து பாய்ந்து சென்ற, அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதற்காக முயற்சிகளை எடுத்தபோது அதனை குழப்புவதற்காக, எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பக்கவாத்தியமாக இணைந்து கொண்டவர் கூட இந்தப் பரச்சினைகளைப் பற்றி கூறுகின்றார்.

இவ்வாறு பாய்ந்து பிரிந்து சென்றவர் இப்போது மைத்திரிபால சிறிசேன அவர்களின் பக்கமாக இருக்கின்றார், மகிந்த ராஜபக்சவின் பக்கமாக இருக்கின்றார். இங்கிருந்து சத்தமிடுவதை விடுத்து நேரடியாக அவர்களிடம் சென்று விடய ஞானத்தோடு பேசி அந்தப் பிரச்சினையை அவர் தீர்த்திருக்க வேண்டும். வீதிகளில் கூச்சல் போடுவது மாத்திரம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு போதாது.

நாங்கள் முன்னர் இவ்விடயம் தொடர்பில் பிரதமருடன் கதைத்தபோது அது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் சில இழுபறிகள் உள்ளதெனவும் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக சிலகாலங்கள் அதில் கரைந்துவிட்டதெனவும் அப்பிரச்சினையை தீர்ப்போம் எனவும் உறுதியாகச் சொன்னார்.

சில தினங்களுக்கு முன்னர் இது சம்பந்தமாக பிரதமரை சந்தித்தபோது வஜிர அபேவர்தன அவர்களும் உடனிருந்தார். எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் இவ்விடயத்தை கடும்தொனியில் வலியுறுத்தினார். நாங்கள் ஏமாற்றுவதாக மக்கள் நினைக்கின்றனர், ஆகவே முடியும் அல்லது முடியாது என ஒன்றைச் சொல்லுங்கள் வேறு பேச்சுக்கள் வேண்டாமென கூறியபோது முதலாவதாக நிதி அதிகாரத்திற்குரிய கணக்காளரை நியமிப்பேன் என்றும் நில அதிகாரத்திற்குரிய விடயங்களை இரண்டு மூன்று மாதங்களுக்குள் செய்து முடிப்பேனென்றும் குறிப்பிட்டார்.

இதனை கதைத்து சாணக்கியமான முறையில் முடிக்க வேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று போதைவஸ்துகள் அருந்தியவர்கள் போன்று காரசாரமாக பேசுவதால் பெரிதளவில் தாக்கம் ஏற்படப்போவதில்லை. விளம்பரத்திற்கான அரசியலைவிட விடயஞானமுள்ள அரசியலில் நாங்கள் ஈடுபடவேண்டும்.

எங்களுடைய கட்சியிலிருந்து பாய்ந்து சென்ற நபரோடு சார்ந்திருக்கின்ற மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச போன்றோர் இவ்விடயம் தொடர்பில் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அவர்களோடு பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு எதுவும் செய்யாமல் வீதிகளில் நின்று தனியே குரலெழுப்புவதால் மாத்திரம் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நாங்கள் விடயத்தை உரியவர்களுடன் பேசுகின்றோம். அவர்களிடமிருந்து வாக்குறுதிகளை பெறுகின்றோம். வாக்குறுதிகளில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நகர்வுகளை செய்கின்றோம்.

இத்தனையும் செய்யும் போது அதனை விடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்கின்றனர் என்றால் என்ன சொல்வது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ அல்லது கருணா குழுவோ இப்போது பிரிந்து சென்ற நிரந்தர கட்சியோ கொள்கையோ இல்லாதவர்களோ மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய அளவிற்கு காலம் வந்துவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அக்கட்சியில் இருக்க வேண்டும். மக்கள் ஆணை அதுவேயாகும். எங்களுக்கு இலாபங்களில்லை என்பதற்காக சுயநலன்களை பேணிக்கொள்வதற்காக பாய்ந்துவிட்டு போலித்தனமான குதர்க்கமான பிரதிவாதங்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊடகங்கள் உண்மைகளை எடுத்துரைக்கின்றன. ஓரிரு ஊடகங்கள் உண்மைகளைவிட பொய்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறிப்பிட்ட நபர்களை மாத்திரம் மையப்படுத்தி சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அவர்கள் ஊழல் செய்கின்றார்களா இலஞ்சம் வாங்குகின்றார்களா மோசடி செய்கின்றார்களா மக்களை ஏமாற்றுகின்றார்களா ஒரே கொள்கையில் இருக்கின்றார்களா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. அவர்களை வளர்த்துவிடுவதன் மூலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்து பேரினவாத கழுகுகளுக்கு வாக்குத் தீணி போடுவதற்காக அவ்வாறான ஊடகங்கள் செயற்படுகின்றன என்று தெரிவித்தார்.