தமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!

காரைதீவில் பொதுபலசேனா தலைவர் வண.ஞானசார தேரர்!
(காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

மொழியால் வேறுபட்டாலும் ஏனைய கலாசாரங்கள் வணக்கங்களில் ஒன்றுபட்ட தமிழர் சிங்கள சமுகங்கள் ஏன் இணைந்து பயணிக்கமுடியாது? எனவே இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின்  கட்டாயம்.

இவ்வாறு நேற்று(22) சனிக்கிழமை காரைதீவு  உண்ணாவிரதிகள் மத்தியில் உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


காரைதீவில் கடந்த நான்கு நாட்களாக கல்முனை உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான உண்ணாவிரதிகளை நேற்று(22) சனிக்கிழமை சென்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்முனைக்குச்சென்று வரும் வழியில் வண.ஞானசாரதேரர் குழுவினர் அனைவரும் காரைதீவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் பேசுகையில்:


அம்பாறை மாவட்டத்தில் முதல் முதல் கல்முனை பிரதேசசெயலக தரமுயர்த்தல் பிரச்சினையைத்தான் கேள்வியுற்றேன். இற்குவந்தபிற்பாடுதான் தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்தேன். பலவித அதிகார அடக்குமுறைகளை அறிந்தேன். பலதமிழ்க்கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆலயங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு காரைதீவு தமிழ்பிரதேச சபை என்பதால் இங்கு நடைபெற்றுவரும் புறக்கணிப்புகள் பாரபட்சங்கள் அநீதிகளை அறிகிறேன்.தவிசாளருக்கான அச்சுறுத்தலை அறிகிறேன்.

இவற்றையெல்லாம் உங்களது அரசியல்வாதிகள் கைகட்டி பார்த்துக்கொண்டுதானிருந்தார்களா? அப்படிப்பட்டவர்களை ஏன் தெரிகிறீர்கள்?
இங்குள்ள பிரச்சினைகளுக்கு தனியே முஸ்லிம் அரசியல் தலைமைகளை மட்டும் குற்றம்சாட்டவில்வை. மாறாக சில சிங்கள் தமிழ் தலைமைகளும் அதற்கு உடந்தையாகஇருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் இணைந்து ஒட்டுமொத்த நாட்டையே தாரை வார்த்துக்கொடுப்பார்கள்.

இது பௌத்தநாடு அது தமிழ்நாடு என்று கூறுவதல்ல. இந்தப்பூமியில் பிறந்த அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது. நாட்டில் நீதிஇரண்டாக இருக்கமுடியாது. இனிமேல் உங்களுக்கு ஏதாவது அநீதி நடந்தால் எம்மிடம் சொல்லுங்கள். ஒன்றிணைந்து பயணிப்போம். புத்தரும் பிள்ளையாரும் ஒன்று என்றால் ஒரே வண்ணக்கமுறை என்றால் என்ன தடைஉள்ளது? வாருங்கள் ஒன்றிணைவோம். என்றார்.

தவிசாளர் ஜெயசிறில் பதிலுரை!
உண்ணாவிரதியான காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில பதிலுரையாற்றுகையில்:
கடந்தகால போராட்டத்தைப்பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்திலுள்ள பல தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்டன். ஆலயங்கள் அழிக்கப்பட்டன.


இனநல்லிணக்கம் தமிழ்பேசும்சமுகம் என்றுகூறிக்கொண்டு செய்வது எல்லாம் தமிழரின் நிலங்களை அபகரிப்பதும் அநீதியிழைப்பதுவுமே. அதிகார அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. எமது சபையை முடியுமானவரை புறக்கணிக்கிறார்கள். 


உரிமைக்காகப் போராடிய எமக்கு கல்முனையில் சிறு அதிகாரத்தை வழங்குவதற்கு மறுப்புத்தெரிவிப்பதும் சத்தியாக்கிரகம் நடாத்துவதும் எதற்காக? எமது உரிமையை நசுக்கிஅடக்கிஆள்வதே அவர்களது நோக்கமாகும். அடிமையாக்கப்பார்க்கிறார்கள்.

அவர்களது அபிவிருத்திகளுக்கு உரிமைகளுக்கு நாம்ஒருபோதும் தடையாக இருந்ததில்லைஆனால் எமது ஒவ்வொரு விடயத்திற்கு தடையாக இருந்துவருகிறார்கள்.
அமைச்சர்கள் பொதுவானவர்கள். ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களது பிரதேசத்தைமட்டுமே அபிவிருத்தி செய்கிறார்கள். இது முறையா? 


நாம் இணைந்து பயணிக்கவேண்டிய காலகட்டம் கனிந்துள்ளது. இனிமேல் சகல பாரபட்சங்களும் அநீதிகளும் தங்களுக்கு அறியத்தரப்படும் என்றார்.
தங்களை மதித்துவந்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அதேவேளை   நேற்றையதினம் யாழ்.அரசியல் பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் சட்டத்தரணி. வி.தவராசா முன்னான் அமைச்சர் அனந்திசசிதரன் உள்ளிட்ட குழுவினரும் வருகைதந்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்.