படுவான்சமரை வெற்றி கொண்டது காஞ்சிரங்குடா ஜெகன்

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய படுவான்சமர் உதைபந்தாட்டப்போட்டியில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகம் முதலிடத்தினைப் பெற்று சம்பியனானது.

32அணிகள் பங்கேற்றியிருந்த, விலகல் முறையில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு, காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும், பட்டிப்பளை வைரவர் அணியினரும் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்போது வழங்கப்பட்ட நேரத்திற்குள் ஒருகோளினை உட்புகுத்தி காஞ்சிரங்குடா ஜெகன் அணி முதலிடத்தினைப் பெற்று சம்பியனானது.

மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானம், கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானம் போன்றவற்றில் சனி, ஞாயிறு(22,23) ஆகிய இருநாட்களும் உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிபோட்டியும், வெற்றிக்கிண்ணம், பரிசில்கள் வழங்கலும் கொக்கட்டிச்சோலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

சிறந்த விளையாட்டு வீரர், பந்துகாப்பாளர், அதிக கோள்களை உட்செலுத்தியவர், சிறந்த நன்னடத்தை அணி போன்றவற்றிற்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டமையுடன், முதல் மூன்று நிலைகளையும் பெற்ற அணிகளுக்கு பணப்பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், முதல் இரு இடங்களையும் பெற்றுக்கொண்ட அணிகளின் வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

விளையாட்டுக்கழகத்தின் தலைவர் நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா, வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.