கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஏன் முஸ்லிம்கள் தடை போடுகிறார்கள் என அமைச்சர் மனோ
கணேசன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் கேட்பதிலிருந்து அவர்கள் இது சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதே தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்முனையில் வாழும் 70 வீதனான முஸ்லிம்களுக்கும் 29 கிராம சேவை பிரிவுகள் 30 வீதமான தமிழருக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன என்பதாவது இவர்களுக்கு தெரியுமா என்று கேட்கிறோம். இவ்வாறு இருப்பது நியாயமா தர்மமா என ஏன் தமிழ்த்தலைவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
கல்முனையை 1987ம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று பிரிக்கலாம் என முஸ்லிகள் தரப்பில் சொல்லப்பட்டும் அதனையும் தமிழர் தரப்பு மறுப்பது ஏன்?
பிரதேச செயலகம் ஒன்று இல்லாத ஊருக்கு புதிய செயலகம் வழங்கலாம். ஆனால் கல்முனைக்கென ஏற்கனவே செயலகம் இருக்கும் போது ஏன் இன்னொரு செயலகம்? அந்த செயலகம் கூட தமிழ் மொழியில் இயங்குவதால் அது தமிழ் செயலகம்தானே தவிர முஸ்லிம் செயலகம் இல்லை. அவ்வாறான பெயரில் பதிவும் இல்லை.
கொழும்பில் கூட சிங்கள செயலகம், முஸ்லிம் செயலகம், தமிழர் செயலகம் என பிரதேச செயலகங்கள் இல்லாத போது சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கல்முனைக்கு மட்டும் ஏன் இரண்டு செயலகங்கள்? அதுவும் தமிழ் பிரதேச செயலகம் என கூற நாட்டில் சட்டம் உண்டா?
கல்முனைக்கு கூடுதலாக இன்னொரு செயலகம் வேண்டும் என்றால் பாண்டிருப்பு செயலகம் என்ற பெயரில் ஒரு செயலகம் கிடைக்க போராடலாம். அதற்கு முஸ்லிம்களும் தடை போட மாட்டார்கள்.
எவ்வாறு சாய்ந்தமருதும் கல்முனை மாநகர சபைக்குள் உள்ளதோ அவ்வாறே பாண்டிருப்பும் உள்ளது. பாண்டிருப்பையும் சேனைக்குடியிருப்பையும் நிலத்தொடர்புடன் சேர்த்து பாண்டிருப்பு பிரதேச செயலகம் ஒன்றை பெற ஏன் தமிழ் மக்கள் விரும்பவில்லை.? இதற்கு காரணம் 90 வீதம் முஸ்லிம்களின் வர்த்தகம் உள்ள கல்முனை நகரை சூறையாட வேண்டும் என்ற கள்ளத்தனமான நோக்கமே தவிர வேறில்லை என்பதை மனோ கணேசனும் சிவாஜி லிங்கம் போன்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றோம்.
கல்முனை நகரை விடுத்து அதற்கப்பால் இன்னொரு செயலகம் பெற தாம் தயார் என தமிழ் தரப்பு தெரிவித்தால் அதை எந்தவொரு முஸ்லிமும் எதிர்க்க மாட்டார் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறோம். இதனை தமிழ் மக்கள் ஏற்க வைக்க நல்லிணக்க அமைச்சரான மனோ கணேசன் ஏன் முயற்சிக்காமல் இருக்கிறார் என கேட்கிறோம்.