கல்முனை பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இருக்கின்றபோதிலும், சகோதர முஸ்லிம் சமூகத்தினால் இத்தனை காலமும் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடாமல் தடுத்துவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதனை நிவர்த்திசெய்து பூரண அதிகாரங்களுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்கவேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்துவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அரசாங்கத்தின் செய்தியோடு வருகைதந்த அவர் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சென்ற வருட இறுதியில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவிக்கு வரும்போது நாங்கள் முன்வைத்த பத்து கோரிக்கைகளில் முதல் கோரிக்கை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்தான் இருந்தது.
எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனவரி மாதத்தில் இருந்து இது தொடர்பாக பேசுகின்றபோது இது தொடர்பான முழுமையான நியாயம் எங்கள் பக்கம் இருந்தாலும்கூட எங்களது முஸ்லிம் சகோதரர்களுடனும் பேசினோம்.
அவர்களுக்கு இதில் என்ன பிரச்சினையிருக்கின்றது என்பது குறித்தும் நாங்கள் பேசியிருக்கின்றோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டதாக சொல்கின்றார்கள்.
ஆனால் இங்கு கணக்காளர் இல்லை. எனினும், நாங்கள் கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் எழுத்துமூலமாக பெற்றிருக்கின்றோம்.
இது தொடர்பில் ஆராய ஒரு தேசிய குழு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அதன் பணியை செய்யமுடியாமல் இருந்தது.
ஆனால் மீண்டும் அதன் பணியை தற்போது ஆரம்பித்துள்ளது. ஜுன் 30ஆம் திகதிக்கு முன்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சகல அதிகாரங்களுடனும் இயங்கும் என்ற உறுதிமொழி எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தேசிய குழு இயங்காத காரணத்தினால் அந்த திகதிக்குள் முடிக்கமுடியாமல்போய்விட்டது. மூன்று மாதங்களுக்குள் நாங்கள் பூரணப்படுத்திதருகின்றோம் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதனை எழுத்தில் நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகம். இதனை தரமுயர்த்த எதனையும் செய்யவேண்டியது இல்லை.
ஆனால் முழுமையான பிரதேச செயலகத்தினை முழுமையாக இயங்கவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.