ஒவ்வொரு சமூகமும் அபிவிருத்தியடைய வேண்டும்.இதனை சகோதர முஸ்லீம் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

உண்மையான முற்போக்கு மிக்க மக்கள் எழுச்சிகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்.  விளம்பரத்திற்கான ஆர்ப்பாட்ட அரசியலை விட விடயதானமுடைய அர்த்தமிக்க அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. சுயநலமிகளின் சுயநல இருப்புக்கான அரசியல் நாடகங்களை மக்கள் இனங்காண வேண்டும். ஓசையில்லாமல் அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகித் தீர்க்கக்கூடிய புத்திஜீவிகளே இந்த நாட்டுக்குத் தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும், வினைத்திறனுடனும் கொண்டு செல்வதற்குப் பிரதேச செயலகம் போன்ற நிர்வாக அலகுகள் தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். இதனை மறுப்பதென்பது தமிழ் மக்களின் அபிவிருத்தியை மறுக்கின்ற செயலாகவே கருத வேண்டியிருக்கின்றது. ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை மற்றுமொரு சமூகம் முற்போக்குச் சிந்தனையின் அடிப்படையில் வரவேற்க வேண்டும். மாறாக அதனை மறுதளிப்பதென்பது சமூகங்களிடையே முரண்பாடுகளையும், பகைமைகளையும் உருவாக்கும் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்தாக வேண்டும். ஒவ்வொரு சமூகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. அதில் முட்டுக்கட்டை போடாமல் செயற்படும் போது சமூகங்களிடையே ஐக்கியமும் நட்பும் தழைத்தோங்கும்.

இதனை சகோதர முஸ்லீம் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். சாதாரண அப்பாவி சமூக மக்களை முரண்பாடுகளுக்கு உள்ளாக்கி உறவுகளைச் சீரழித்து விடக் கூடாது. தத்தமது சமூகத்தை வளர்த்தெடுக்கும் அதேவேளை மற்றைய சமூகங்களின் வளர்ச்சியிலும் நாம் அக்கறையுள்ளவார்களாக இருக்க வேண்டும். விரோதம், குரோதம், முரண்பாடுகள், பகைகளை உருவாக்குவதென்பது முதிர்ச்சியற்ற சுயநலம் சார்ந்த செயற்பாடுகளாகும். மாறாக உடன்பாடு, ஐக்கியம், நட்புறவு என்பவற்றை ஏற்படுத்துவதென்பது கடினமான விடயமாகும்.

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் இலகுவான எதிர்மறையான செயற்பாடுகளை அநேகமான அரசியல்வாதிகள் செய்துகொண்டே இருக்கின்றார்கள். கடினமான, நேர்கணியமான செயற்பாடுகளை அருமை, பெருமையாக விரல்விட்டு எண்ணக்கூடிய சில தலைவர்களே செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆயின், பெரும் எண்ணிக்கையானவர்கள் நல்ல விடயங்களில் அக்கறையற்றவர்களாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த கடந்தகால வரலாற்றினை மாற்றியமைக்க வேண்டும்.

எதிர்கால எமது சந்ததியாவது நிம்மதியாக வாழ்வதற்குரிய பாதைகளை நிகழ்காலத் தலைவர்கள் செய்து கொடுக்க வேண்டும். சிலுசிலுப்பு அரசியல், கிளுக்குப் பெட்டி அரசியல், வெறியூட்டும் அரசியல், கொந்தளிப்பும் குமுறல்களும் நிறைந்த அரசியல் என்பவற்றை மிக இலகுவாகச் செய்து விடலாம். இப்படியானவர்களின் கடந்தகாலப் போக்குகளால் நாடு குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் எமது நாட்டினை எமது தலைவர்களால் அபிவிருத்தியடைந்த நாடாக ஆக்கமுடியால் போய்விட்டது. இதற்கெல்லாம் காரணம் சிறுபிள்ளைத் தனமான சுயநல அரசியல்களே காரணமாகும். முற்போக்கான அமைப்புகள் என்ற பெயரளவில் பிதற்றுகின்றவர்கள் செயலளவில் பிற்போக்கான மூடத்தனமாக அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

வெகுளித் தனமான விளம்பர அரசியலால் இந்த நாட்டை வளம்பெறச் செய்ய முடியாது. எனவே எமக்கு எமக்கென்று சுயநல சிந்தனைகளை விட்டு எல்லோருக்கும் என்று பொதுநல சமத்துவ சிந்தனையோடு செயற்படக் கூடிய உண்மையான முற்போக்காளர்களே இன்றைய அரசியலுக்கு மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றார்கள். கொள்கையற்று, குறிக்கோளற்று சுயநலங்களுடன் தத்தமது பணப்பைகளை நிரப்பி தனவந்தர்களாக மாறிவிட்டால் போதும் என்ற நிலையில் ஊழல் மோசடி லஞ்சம் என்பவற்றை செய்து கொண்டு சுத்தக்கார கொத்தமல்லியர்கள் போன்று பிழைப்புவாத அரசியல் நடாத்துகின்றவர்களை சமூகம் நன்றாக இனங்கண்டு ஒதுக்கியே ஆக வேண்டும். நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி, நாளை ஒரு கட்சி என்ற அடிப்படையில் சந்தர்ப்பவாத அரசியல் மூலமாக பணச்சுருட்டல்களைச் செய்கின்ற விசமிகளை மக்கள் கண்டறிந்து ஒதுக்க வேண்டும்.

சட்டசபைகளிலும் நிர்வாக மன்றங்களிலும், நிருவாகச் செயலகங்களிலும் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், வினைத்திறன் மிக்கவர்கள் இடம்பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். போலிகள், புறநடைகளைத் தவிர்த்தாக வேண்டும். அடிப்படைவாத அரசியல் நாட்டின் அடித்தளத்தையே அழித்துவிடக் கூடியது. இந்த நாடு ஒரு சமூகத்தை வஞ்சிக்கின்ற நாடாகவோ அழிக்கின்ற நாடாகவோ புத்திஜீவிகளை வெளியேற்றுகின்ற நாடாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் இந்த நாட்டுக்கு விமோசனமே கிடையாது.

இன்றைய சூழலில் விளம்பரத்திற்கான ஆர்ப்பாட்ட அரசியலை விட விடயதானமுடைய அர்த்தமிக்க அரசியலே தேவைப்படுகின்றது. இதில் உண்மையான முற்போக்கு மிக்க மக்கள் எழுச்சிகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். சுயநலமிகளின் சுயநல இருப்புக்கான அரசியல் நாடகங்களை மக்கள் இனங்காண வேண்டும். ஓசையில்லாமல் அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகித் தீர்க்கக்கூடிய புத்திஜீவிகளே இந்த நாட்டுக்குத் தேவை. மாறாக சலசலப்புப் கலகலப்பும் சுயநலமும் கலந்த கடந்த கால அரசியல் இக்காலத்திலும் தொடர்வதால் எப்பயனும் கிடையாது.

சிறு சிறு பிரச்சினைகளுக்கான தீர்வினை விரைந்து கண்டறிவதன் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காணக்கூடிய ஆளுமையுள்ள தலைவர்களாக அமைச்சர்கள் தம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏமாற்றுகையும், ஏமாறுகையும் கடந்த கால கறைபடிந்த வரலாறுகளையே உயிர்ப்பூட்டுவதாக அமைகின்றது. ஏமாற்றிய பல தலைவர்கள் நாட்டைக் கெடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள். இனி இருக்கின்ற தலைவர்களாவது நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்கின்றவர்களாகத் தம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடுகள் நனைகின்ற போது ஓநாய்கள் ஒப்பாரி வைத்த வரலாறுகளை மறக்கக் கூடாது. ஓநாய்கள் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் இருந்து விடுபட்டு முற்போக்கான அரசியற் தலைவர்களாக மத, இன, மொழி, குல சார்பற்ற மனிதங்களை வளர்த்தெடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.