மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முதலமைச்சர் பதவிகளையும், பிரதியமைச்சர் பதவிகளையும் வகித்தவர்கள் மற்றவர்கள் மீதுகுறைகூற முன் தங்களை தாங்களே விரல் நீட்டி குற்றம் சொல்வதே பொருத்தமானது

மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய உத்தரவாதத்திற்கமைய கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விடயம் இடம்பெற்றிருக்குமானால் இப்படி ஒரு போராட்டத்திற்கு எமது மக்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களின் பல போராட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டது போல் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் தரமுயர்வுப் போராட்டத்தையும் உதாசீனம் செய்ய முற்பட்டால் அரசு ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டும் என கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளும் மதத்தலைவர்கள் உட்பட கல்முனை மாநகரசபை உறுப்பினர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவர்களை நேரில் சென்று தமது ஆதரவினை தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்தக் கோரி கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் இவர்களின் நியாயமான கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் கோரிக்கையாக ஏற்று ஆட்சியாளர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் தட்டிக்கழித்து இழுத்தடிப்புச் செய்து வருவதே இலங்கையில் ஆட்சியாளர்களின் வழக்கமான செயற்பாடாக போய்விட்டது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரச தலைவர்களால் தட்டிக்கழிக்கபட்டு உதாசீனம் செய்யப்பட்டது போல் இந்தப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்ற போராட்டத்தினையும் தட்டிக்கழிக்க முற்பட்டால் இந்த அரசு ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இதன்படி இதனை தரம் உயர்த்தித் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசினால் உத்திரவாதமும் வழங்கப்பட்டது. இவ் உத்தரவாதத்திற்கமைய அது இடம்பெற்றிருக்குமானால் இப்படி ஒரு போராட்டத்திற்கு எமது மக்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இந்த நியாயமான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற எமது மட்டக்களப்பு மாநகர மக்களும் துணை நிற்கின்றார்கள். வெகு விரைவில் நல்லதோர் செய்தியும் கிட்டும் என்று நம்புகிறேன். இது தொடர்பில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பிரதமர் மற்றும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும்.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முதலமைச்சர் பதவிகளையும், பிரதியமைச்சர் பதவிகளையும் வகித்தவர்கள் தாம் எப்போதோ இந்த கோரிக்கையை முன்கொண்டு சென்றிருக்கலாம் அதைவிடுத்து இன்று முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்கள் மற்றவர்கள் மீதுகுறைகூற முன் தங்களை தாங்களே விரல் நீட்டி குற்றம் சொல்வதே பொருத்தமானது என்று தெரிவித்தார்.