மட்டக்களப்பிலுள்ள ஒரு சில பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு சில உயர் நிருவாகிகளால் மேற்கொள்ளப்படுகின்ற முறைகேடான செயற்பாடுகள் பிரதமரிடம் சிறிநேசன் எம்.பி எடுத்துரைப்பு.

மட்டக்களப்பிலுள்ள ஒரு சில பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு சில உயர் நிருவாகிகளால் மேற்கொள்ளப்படுகின்ற முறைகேடான செயற்பாடுகள், அதிகார, நிதி துஸ்பிரயோகங்கள், அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாக பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்நாட்டு அலுவல்கள், உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன்

.அவர்களால் அலுவலர்களுக்கும், மக்களுக்கும் ஏற்படும் அவஸ்தைகள், மனஅழுத்தங்கள் தொடர்பாகவும் பிரதமர் மற்றும் உள்நாட்லுவல்கள் அமைச்சரிடமும் என்னால் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய உச்சமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூறப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்துக்கு நிதி அதிகாரம், நிலப் பரிபாலன அதிகாரம் இரண்டும் வழங்கப்பட்டாக வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக விரைவில் அபிவிருத்தியைக் கொண்டு செல்வதற்கு இப்படியான செயலகம் மிக மிக அவசியமானது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இது தொடர்பில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. அத்துடன் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் உருப்படியானதும், உறுதிமிக்கதுமான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றிய கருத்து வெளிப்பாட்டினை வெளியிட்டாக வேண்டும் என்ற விடயத்திலும் கருத்தாடலில் இணக்கம் காணப்பட்டது. கடந்த கால கருத்துப் பரிவர்த்தனைகள் போன்றல்லாமல் இன்றைய கருத்தாடல் நம்பிக்கையூட்டத்தக்க விதத்தில் அமைந்திருந்தது எனவும்தெரிவித்தார்.