கிழக்கின் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பல் தொடர்பில் கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை சார்ந்து கிழக்கு மாகாணத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதற்கும் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமான நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை திருகோணமலை உப்புவெளியிலுள்ள ஜேகப் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விசேட கலந்துரையாடல் கருத்தரங்கில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ஷான் விஜயலால் டி சில்வா கலந்து கொண்டார்.
வரவேற்புரையினை, கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் இந்திக நலின் ஜெயவிக்கிரமவும், அறிமுக மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விளக்கமளித்தலை பணியகத்தின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் ஆகியோரும் நிகழ்த்தினர். ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தனவும் பங்கு கொண்டு கருத்துக்களை முன்வைத்தார்.
இதன்போது, கிழக்கின் சுற்றுலாத்துறை ஏப்ரல் 21க்குப்பின்னர் எதிர் கொள்ளும் பல்வேறு பட்ட பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன.
முக்கியமாக பாதுகாப்பு சார் பிரச்சினைகள், வருமானம் மற்றும் நிதி தொடர்பான சிக்கல்கள், சந்தைப்படுத்தல் துறை சார்ந்துள்ள விடயங்கள், சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளின் நிலைமை, தொழிலாளர்களின் தொழில் திறன் மற்றும் மனித வளப்பிரச்சினைகள், சுற்றுலாத்துறை சார் ஒழுங்கு விதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.
இதில், பொலிஸ், மற்றும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படையினரும் கலந்து கொண்டு சுற்றுலாத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளைக் காண விளைந்தனர்.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபரால் முன்வைக்கப்பட்ட சுற்றுலா பொலிஸ் நிலையத்துக்கான காணிக்கான கோரிக்கை உடனடியாக மாகாணக் காணி ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு காணி வழங்குவதற்கான முடிவு காணப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அரச அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.