அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை ரத்து.

(எருவில் துசி)

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் செல்கிறார். அதனோடு இணைந்ததாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் திட்டமிடப்பட்டுள்ள இந்து-பசுபிக் பிராந்தியத்துக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத திட்டமிடல் நெருக்கடிகள் காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று இராஜாங்க செயலாளரினால் இம்முறை கொழும்புக்கு பயணம் செய்ய முடியாமல் போவதையிட்டு செயலாளர் பொம்பியோ தனது வருத்தத்தை வெளிட்டுள்ளார்.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுதந்திரமானதும் பகிரங்கமானதுமான இந்து-பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இலங்கையுடனான எமது உறுதியான பங்காண்மையை கோடிட்டு காட்டுவதன் நிமித்தம் பின்னொரு தினத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள அவர் எதிர்பார்த்துள்ளார்.

இந்த நோக்கங்களில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதுடன், எமது நீண்டகால பங்காண்மையை மேலும், முன்னேற்றிக் கொள்ளவும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.’என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.