வாய் பொத்தி கைக்கட்டி பார்த்துகொண்டிருக்க நாம் தயாரில்லை.

முப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல
என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி பிரதேச செயலகம் முன்பாக  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று உண்ணாவிதரத்தில்  ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிடச் சென்று அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
1993.07.28. ஆம் திகதி அன்று நடளாவிய ரீதியில் அமையப்பெற்ற 29 உப பிரதேச செயலகங்களில் 28 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டிருக்க  ஏன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றது என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. கடந்த மூன்று தசாப்தம் தாண்டிய காலத்தில் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்திலே  இந்த மாகாணத்தை தங்களின் மாகாணமாக மாற்ற முற்படுகின்ற செயற்றிட்டம் இந்த மண்ணிலே சகோர இன அரசியல்வாதிகளால் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது.
இதனைக் கடந்த காலத்திலிருந்தவர்கள் வாய் பொத்தி கைக்கட்டிப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம் நாம் அவ்வாறு இருப்பதற்குத் தயாரில்லையெனக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.