நீர்மட்டம் குறைவு : மீன்கள் இறந்து மிதப்பு : புளுகுணாவை குளத்தில் சம்பவம். (video)

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் மீன்கள் இறந்து மிதப்பதாகவும், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகின்றனர்.

விவசாய செய்கைக்காக குளத்தில் காணப்பட்ட நீரினை வழங்கிமையினால், நீர்மட்டம் குறைவடைந்து 3அடி உயரத்தில் தற்போது நீர் உள்ளமையினால், வெப்பம்கூடி மீன் இறக்கின்ற நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

8அடி உயரஅளவிலான நீரினை இருப்புசெய்து ஏனைய நீரினை சிறுபோக நெற்செய்கைக்காக திறந்துவிடுவதே வழமையென்றும், இவ்வருடம் இதற்கு மாறாக நீரினை 3அடி அளவில் சேமித்து வைத்துள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

70குடும்பங்கள் இக்குளத்தினை நம்பி வாழ்கின்ற அதேவேளை, காட்டுயானைகள், கால்நடைகள், ஏனைய மிருகங்கள் இக்குளத்து நீரை நம்பியே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

20வருடங்களுக்கு மேலாக இக்குளத்தில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் கூட, இந்தவருடமே இவ்வாறு 8அடிக்கும் குறைவான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய கூட்டத்தீர்மானத்திற்கு மாறாக அதிகளவான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனால், இவ்வாறு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

ஆறு இலட்சம் மீன்குஞ்சிகள் அண்மையில் குளத்தில் விடப்பட்டதாகவும், இதற்கான முதலீட்டினை இப்பாதிக்கப்பட்ட மக்களே இட்டிருக்கின்றனர். மேலும் கடந்த 15ம் திகதி பூட்டிருக்க வேண்டிய வான்கதவு அன்றைய நாள் பூட்டவிடவில்லையெனவும், இதுதொடர்பில் உரிய நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் பேசியும் அன்றைய தினம் பூட்டப்படாது கடந்த 16ம் திகதியே பூட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நீரின்மை காரணமாக மீன் இறந்து மிதப்பதினால், இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்புதான் மீன்பிடித்தொழிலில் ஈடுபடக்கூடிய நிலையேற்படும் எனவும் கூறும்மக்கள், பாதிக்கப்பட்டிருக்கின்ற மீனவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதுடன், எதிர்வரும்; காலங்களில் 8அடிக்கு குறையாதளவு நீரினை பேணிப்பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் இதுகுறித்த விளக்கங்களை இன்றையதினம், குளத்தின் அருகில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கியமையுடன், சம்பவ இடத்திற்கு மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதேசசபை உறுப்பினர் இ.கிரேஸ்குமார் ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.