பட்டிப்பளையில் ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சி நிலையம் மீள் திறப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சி நிலைய மீள் திறப்பு இன்று(14) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற மீள் திறப்பு நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மண்முனை தென்மேற்கு கோட்டம் பட்டிருப்;பு கல்வி வலயத்துடன் இணைந்திருந்த 2003ம் ஆண்டு காலப்பகுதியில் இந்நிலையம் அமைக்கப்பட்டது. பின் 2006, 2007ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் 2007ம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இடம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் குறித்த வளநிலையத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தமையுடன், இவ்வளநிலையத்தில் பொலிஸார் தமது நிலையத்தினை அமைத்துக்கொண்டனர்.

பொலிஸ் நிலையமாக வளநிலையம் செயற்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியமையினை தொடர்ந்து, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திடம், இந்நிலையம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையத்திற்கான தளபாட வசதிகளோ, ஏனைய வசதிகளோ இல்லாத நிலையிலேயே மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் வழங்கப்பட்ட சிறியளவிலான தளபாட வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.