பலரின் நெருக்குதலே வாண்மைவிருத்தி நிலைய மீள் திறப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய திறப்புக்கு, பலரின் ஒத்துழைப்பும் நெருக்குதலுமே காரணமென்கிறார் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன்.
பட்டிப்பளையில் இன்று(14) ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சி நிலையம் மீள் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

பட்டிப்பளையில் அமைந்துள்ள ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையம் பொலிஸ் காவலரனாக 12வருடங்கள் இருந்துள்ளது. இந்நிலையத்தினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு சொந்தமான ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையமாக மாற்றி, மீள்திறப்பு விழாவும் செய்வதற்கு பலர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறநேசன், ச.வியாழேந்திரன் பேசியிருந்தமையுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொ.செல்வராசா ஆகியோரும் வாண்மைவிருத்தி நிலையத்தினை விடுவிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வந்தனர். அதேநேரம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றிய க.பாஸ்கரன், க.சத்தியநாதன், அகிலா கனகசூரியம் ஆகியோரும் முயற்சித்திருந்தமையுடன் தற்போதைய வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் காலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர்களாக கடமையாற்றிய வாசுகி அருள்ராசா, சிவப்பிரியா வில்வரெத்தினம், நமசிவாயம் சத்தியானந்தி, தெட்சணகௌரி தினேஸ் ஆகியோரும் தாம்சார்ந்த முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். குறித்த வளநிலையத்தினை திறக்க வேண்டும் என்பதிலும், அதற்கான தளபாட வசதிகள் சிலவற்றினையும் வழங்கி வளநிலையத்தினையும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திறந்து வைத்திருக்கின்றார். இதேபோல முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்பும் அளப்பெரியது.

பலதரப்பட்டவர்களின் வேண்தலுடன், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியின் ஒன்கூடல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற போது, இவ்விடயம் குறித்து கூறப்பட்டமைக்கு அமையவே இந்நிலையம் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழிருந்து விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.