மட்டக்களப்பில் புதிய சமுர்த்தி பயனாளிகள் 27,231 புதிய பயனாளிகளுக்கான உரித்துப் படிவங்கள்

ஆறு இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு  வியாழக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்றது.
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே  தலைமையில் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தேவபெரும, முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.எஸ்.எஸ்.  அமீர் அலி  உட்பட ஏறாவூர் நகரசபையின்  தவிசாளர் I.வாஸித் மற்றும் பல்வேறு  முக்கியஸ்தர்களது பங்கேற்புடன்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் குறித்த செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 27,231 புதிய பயனாளிகளுக்கான உரித்துப் படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் , கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவில் 1897 பேரும், மன்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 3490 குடும்பங்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 2625 குடும்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் இருந்து 443 குடும்பங்களும், மன்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 1168 குடும்பங்களும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 948குடும்பங்களும் , கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து 2230குடும்பங்களும், மன்முனை வடக்கில் இருந்து 1630 குடும்பங்களும், ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் இருந்து 971குடும்பங்களும்,  கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 1190 குடும்பங்களும் , கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 2181 குடும்பங்களும் , போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து 3835 குடும்பங்களும், மன்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 2996குடும்பங்களும், மன்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து 1717 குடும்பங்களும் புதிதாக சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் வாயிலாக புதிய பயனாளிகள் தெரிவு தொடர்பிலும் , மேலும் தகுதியானவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான மீளாய்வு வேலைத்திட்டம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.