படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள் நீருக்காக போராடும் அவலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலையினால் அங்குள்ள மக்கள் குடிநீருக்காக போராடி வருவதாக கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை பெய்யாததன் காரணமாக சிறுசிறு குளங்களிலும், கிணறுகளிலும் நீர் வற்று ஏற்பட்டுள்ளமையினால் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மிகுந்த கஸ்டங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். ஓரிரு இடங்களில் மாத்திரம் உள்ள கிணறுகளில் குறைந்தளவிலான நீர் இருப்பதினால் காலைவேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அவற்றில் குளிப்பதற்கு முண்டியடிக்கின்ற நிலையும், குளிப்பதற்கு நீரில்லாமல் திரும்பிச் செல்கின்ற சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. அதேவேளை அக்கிணறுகளில் மீண்டும் நீர் ஊறும் வரை காத்திருந்து நீரை பெற்று குடிநீருக்கு பயன்படுத்துகின்ற துப்பாக்கிய நிலையும் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

தமது பகுதியில் அமைந்துள்ள உன்னிச்சைக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு நகர் பகுதிகளுக்கு குடிநீர் செல்வதுடன், தமக்கு இதுவரை குடிநீர் கிடைக்கப்பெறவில்லையெனவும் கவலை வெளியிடுகின்றனர்.
மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களுக்கு இன்னமும் குடிநீர் கிடைக்கவில்லையெனவும் அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இது தொடர்பில் மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சண்முகராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மண்முனை மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நீர்தாங்கிகள் மூலமாக நாளொன்றிற்கு 42ஆயிரம் குடிநீர் விநியோகிப்படுவதாகவும், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலையும் விட அதிகமான நீர்த்தாங்கிகளை வைத்து குடிநீர் வழங்கி வருவதாகவும் இன்னமும் நீர்த்தாங்கி தேவை உள்ளதாகவும், நீர்த்தாங்கிகள் கிடைக்கும் பட்சத்தில் குடிநீர் பிரச்சினையினை பெரும்பாலும் குறைக்ககூடியதாகவிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.