புலி வருமா வராதா? என்று கூறமுடியாது: முடிந்தளவு பாதுகாப்போம்.

கோடீஸ்வரன் எம்.பியின் கேள்விக்கு வனஜீவராசிகள் அதிகாரி பதில்!
அடியார்களுக்கானதண்ணீர் இராணுவம் வசம்:காட்டிற்குள் எல்லைக்கயிறு
உகந்தை முருகனாலயஆடிவேல்விழாஉற்சவக்கூட்டத்தில் நடந்தவை!.
(காரைதீவு  நிருபர் சகா)


காட்டுப்பாதையில் புலி வருமா வராதா? என்பதை நாம் அறுதியிட்டுக்கூறமுடியாது. அதற்கு உத்தரவாதமும் வழங்கமுடியாது. ஆனால் எம்மால் முடிந்தளவு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கேட்டகேள்விக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட அதிகாரி முனசிங்க பதிலளித்தார்.

அண்மையில் காட்டுப்பாதை திருத்தவேலைக்குச்சென்ற ஒரு தொழிலாளி சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. எனவே பாதயாத்திரீகர்களுக்கான முழுமையான பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்ளவிருக்கிறீர்கள்? என்று கோடீஸ்வரன் கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பான இறுதிக்கூட்டம் நேற்று10) திங்கட்கிழமை பிற்பகல் ஆலய வளாகத்திலுள்ள காரைதீவு மடத்தில் நடைபெற்றது.

ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க  இணைத்தலைமையில் கூட்டம் இருமணிநேரம் நடைபெற்றது.
கூட்டத்தில்ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு.சீதாராம் குருக்கள் பாணமை விகாராதிபதி வண.சந்திரரட்ண மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பொத்துவில் பிரதேசசெயலாளர் எஸ்.திரவியராஜா ஆலயசெயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம் லாகுகலை பிரதேசசெயலாளர் தவிசாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆலய நிருவாகிகள் உற்சவத்தோடு தொடர்புடைய நீர் மின் போக்குவரத்து சுகாதாரத் திணைக்களத்தலைவர்கள் முப்படைகளின் பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

இன்றைய அசாதாரணசூழலின்போது ஆலய ஆடீவேல்விழா தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடைமுறைகள் பற்றியும் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கான யாத்திரீகர்கள்சட்டத்தின்கீழான வசதிகளை வழங்குதல் தொடர்பாகவும்  இருமணிநேரம் கலந்துரையாடப்பட்டது.

அடியார்களுக்கான தண்ணீர் விநியோகம் முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் .இராணுவத்தினது பரிசோதனையின் பின்னரே வழங்கப்படும். தண்ணீர் விநியோகம் காட்டிற்குள் வவுசரில் விநியோகிக்கப்படும். அங்கும் இராணுவப் பாதுகாப்பில் அது நடைபெறும்.
காட்டிற்குள் தற்காலிக கழிவறைத்தொகுதிகள் அமைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த 12தினங்களுள் (ஜூன் 27 – யூலை9) மாத்திரம் காலை 6 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை உட்பிரவேசிக்கமுடியும். பாதுகாப்புக்கருதி அதற்கு முன்னரோ பின்னரோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.முடியுமானவரை பொதிகள் குறைக்கப்படவேண்டும்.பொதிகளின் எண்ணிக்கை குறைப்பது பாதுகாப்பிற்கு மிகவும் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைவரும் அடையாளஅட்டைகளை தம்வசம் வைத்திருத்தல்வேண்டும்.பொலித்தீன் பாவனை முற்றாகத்  தடைசெய்யப்பட்டுள்ளது.

காட்டிற்குள் பிரவேசிக்கமுன்பு சகல அடியார்களும் பதிவிற்குட்படுத்தப்படவிருக்கின்றனர். இதனை இராணுவமும் கடற்படையும் இணைந்து மேற்கொள்ளப்படும்.
குமுக்கன் ஆற்றைக்கடக்கும் பக்தர்கள் அவதானத்துடன் கடக்கவேண்டும். பாதுகாப்பிற்காக கடற்படையினரின் இயந்திரப்படகு நிறுத்தப்பட்டிருக்கும்.
காட்டிற்குள் செல்பவர்கள் காட்டுப்பாதையைத்தவிர்த்து உட்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டமாட்டார்கள். அதற்காக அங்கு எல்லைக்கயிறு ஒன்று கட்டப்படவுள்ளது. அதற்கப்பால் செல்லக்கூடாது என்பது அடியார்களுக்கு விடுக்கப்படும்கட்டளையாகும்.
சுகாதாரத்துறையினரின் அம்புலன்ஸ்சேவை  24மணிநேரமும் சேவையிலிருக்கும். உகந்தை முதல் குமுக்கன் வரை இச்சேவை 24மணிநேரமும் இருக்கும்.
உகந்தைமலைமுருகனாலயத்தில் வைத்து வழங்கப்படும் அன்னதானம் அனைத்தும் சுகாதாரப்பிரிவினரால் சோதனைசெய்யப்பட்டபின்னரே வழங்க அனுமதிக்கப்படுவர்.
அங்கு அன்னதானம் பார்சலில் வழங்கமுடியாது. பீங்கான் அல்லது இலைகளில்தான் அன்னதானம் வழங்கப்படமுடியும்.பிளாஸ்ரிக் போத்தல்கள் பயன்படுத்தமுடியாது.

பாதுகாப்புக் காரணம்கருதி பயணிக்கும் ஆண்கள் அனைவரும் காவிவேட்டி அல்லது வேட்டியை அணிவதும் பெண்கள் இந்துகலாசாரமுறைப்படி காவிசார்ந்த நிறசாறி அணிவதும் பொருத்தமாகவிருக்கும்.
இந்துக்கள் பௌத்தர்கள் சோதனை மற்றும் பதிவின் பின்னர் காட்டிற்குள் கூட்டமாகச் செல்ல அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டவரெனின் விசேடசோதனையின்பின்னர் அனுமதிக்கப்படவுள்ளனர்.