பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தோண்டிய இடத்தில் இல்லை : முனைக்காடு மயானத்தில் சம்பவம்.

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மயானத்தில், காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடும் பணி இன்று(11) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தினைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல்போயிருந்தார்.

குறித்த காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரை கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை, முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த மயானத்தில் குழியொன்று இன்று மாலை தோண்டப்பட்டது. இக்குழியில் இருந்து எவ்வித மனித எச்சங்களும் கண்டுபிடிப்படவில்லை.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த சட்ட வைத்திய அதிகாரிகள், குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் குறித்த குழிதோண்டப்பட்டது.
தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்படாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் குறித்த மயானப்பகுதியில் உள்ள இன்னொரு இடத்தினையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சடலத்தினை தேடும் பணிகள் இன்றையதினம் நிறைவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.