கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்கள் விரும்பி வாக்களிக்கக் கூடியவர்களை தேர்தல்களில் நிறுத்தும்

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்கள் விரும்பி வாக்களிக்கக் கூடியவர்களை தேர்தல்களில் நிறுத்தும் வகையில் எமது அரசியல் பயணம் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கிழக்கு மாகாண அரசியற்களம் என்பது பன்மைத்துவம் கொண்ட ஒன்று தனி ஒரு பிரிவினர் தமக்குள் அரசியற் பலத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது முடியாத ஒன்று. தனித்தனியாக நின்று தாம் சார்ந்த மக்களின் பலத்தைத் திரட்டிக் கொள்கின்ற அதேவேளையில் அடுத்த பிரிவினரோடு இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தியே ஆக வேண்டும். இது தொடர்பான புரிந்துணர்வை மக்கள் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும். சரியான வழிகாட்டல்களை மக்கள் உள்வாங்காதவிடத்து எங்களது தனித்துவ அடையாளத்தை பலவீனப்படுத்துவோம் என்பதால் உணர்வுகளுக்கு அப்பால் சமயோசிதத்தையும் புத்திசாலித்தனத்தையும் நாங்கள் கடைப்பிடித்தாக வேண்டும்.

உதாரணமாக உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேரப் போகிறது என்றும் அது எந்தவகையிலும் பொருத்தமற்றது என்ற விதத்திலும் சிலர் கபடத்தனமான பிரசாரங்களைச் செய்தார்கள். அவ்வாறு பிரசாரம் செய்தவர்களே கோரளைப்பற்று பிரதேச சபையை அமைக்கின்ற போது முஸ்லீம் கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகத்தைக் கைப்பற்றினார்கள். இது எதனைக் காட்டுகின்றது என்றால் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் உறவு வைக்கக் கூடாது என்ற சொல்லி செய்கின்ற பிரசாரத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தலாம் என்றும் அவ்வாறான பலவீனப்படுத்தல் தமக்குப் பலம் சேர்ப்பதாய் அமையும் என்றும் அவ்வாறு பெறுகின்ற பலத்தைக் கொண்டு நிருவாகத்தை (உள்ளுராட்சி மன்றம்) அல்லது ஆட்சியை (மாகாண சபை) முஸ்லீம் அரசியற் தலைவர்களோடு சேர்ந்து தாங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்றும் சிலர் கற்பனை செய்கின்றார்கள்.

இந்த விடயத்தை கவனத்திற் கொண்டு தமிழ் மக்கள் சிறியனவும் உதிரிகளாகவும் உள்ள முதிர்ச்சி பெறாத அறிவுரை கூறுவோரின் பொருத்தமற்ற ஆலோசனைகளைப் பின்தள்ளி ஏற்கனவே தமிழர்களின் பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விரும்பி வாக்களிக்கக் கூடியவர்களை தேர்தல்களில் நிறுத்தும். இத்தகைய பின்புலத்திலான ஒரு கட்டமைப்பினூடாகவே கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் பயணம் அமையும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு நாட்டில் நல்லதொரு ஜனநாயக சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 2015 ஜனவரி 08இன் பின் என்று குறிப்பிடலாம். இந்தச் சூழல் 2018 ஒக்டோபர் 26ல் குழப்பப்பட்டது. இருந்தாலும், அது மெது மெதுவாக சீர்செய்யப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால், 2019 ஏப்ரல் 21 நிகழ்வு அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சியைப் பொருத்தவரையில் அவர்கள் கனவு கண்டு கொண்டிருந்த ஆட்சி மாற்றத்தை அடைவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்தத் தாக்குதல் பற்றி எனக்கு முன்பே தெரியும் என்று குறிப்பிட்டமை, புலனாய்வுத் துறையினரில் சிலர் கைது செய்யப்பட்டமையும், அவர்கள் மீதான நடவடிக்கைகளும் நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டமையெல்லாம் இதனையே காட்டுகின்றது.

வெளிநாட்டு சக்தியொன்றின் உள்நாட்டவர்களை பயன்படுத்தியதான இந்தத் தாக்குதலை நாட்டுக்கு ஏற்பட்ட அபாயம் என்ற கோணத்தில் பாத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாது மேற்குறித்தவாறு செயற்படுவது நாட்டின் அரசியலை குழப்பகரமான ஒரு நிலைமைக்கு கொண்டு செல்வதாகவே இருக்கும். குறிப்பாகச் சொல்வதெனில் எதிர்க்கட்சியானது பொறுப்போடு நாட்டைக் காப்பாற்றுவதை விடுத்து எரிகின்ற வீட்டிலே எதையாவது பிடுங்கி இலாபம் அடைய முயற்சிக்கின்றது.

நாட்டின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் செய்கின்றார்கள். இந்த நாட்டின் பெருந்தேசியவாதிகளின் அரசியல் என்பது ஆட்சியை தங்கள் கையில் எடுப்பதாகவே இருந்து வந்துள்ளது. இவர்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கான நீடித்து நிற்கக் கூடிய தீர்வு, உறுதியான பொருளாதாரம் என்பவற்றில் தங்கி நிற்கவில்லை. எனவே நாட்டின் எதிர்கால அரசியல் தற்போதைய நிலையில் ஆரூடம் சொல்ல முடியாதபடி குழப்பகரமாகவே அமையும்.

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கைப் புலனாய்வுத் துறையில் இருந்திருக்கின்றார்கள் என்பது புலனாய்வுத்துறை பிழையாக வழி நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது. இந்தப் பின்னணியிலே தான் இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்களப் பகுதிகளில் கூட முகாம்கள் என்று சொல்லப்பட முடியாவிட்டாலும் கூட தளங்கள் பல அமைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத வகையில் ஆனால் தெளிவாக ஊகிக்கக் கூடிய வகையில் பல செல்வாக்குள்ள அரசியல்வாதிகளின் அனுசரணை கூட இந்தச் செயற்பாடுகளில் இருந்திருக்கின்றது. இந்த முகாம்கள் அல்லது தளங்களில் ஆயுதப் பயற்சி போர்ப் பயிற்சி போன்ற விடயங்கள் நடைபெற்றிருக்கவில்லை. தாக்குதலைப் பார்க்கின்ற போது அவ்வாறான தேவைகளும் தேவையானதாக இருந்திருக்கவில்லை.

தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் சர்வதேச ரீதயிலான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தளங்களில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். இலங்கை இராணுவத் தளபதி கூறியிருப்பதைப் போல இந்தத் தாக்குதலுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பில் ஐந்து பேரும் மட்டும் சம்மந்தப்படக் கூடிய ஆட்களே தேவைப்பட்டிருக்கின்றார்கள். இந்த வகையிலே பயிற்சிகள் என்பவை பௌதீக அளவிலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்ப் பகுதிகளான தாழங்குடா மற்றும் ஓமடியாமடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தளங்கள் மேற்குறிப்பிட்ட வகையிலே சந்தடி இன்றி செயற்படக் கூடியனவாகவே இருந்திருக்கின்றன. எனவே அயலவருக்குக் கூட இதில் சந்தேகம் ஏற்படுவதற்கு எந்தவித நியாயமும் இருந்திருக்கவில்லை.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட உதவிகளை தமிழ் அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் ஏற்கனவே வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வகையிலே முஸ்லீம் அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் இதே நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கின்றார்கள். தமிழ் இளைஞர்கள் தொடர்பாக பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் செய்யப்பட்ட சில ஒழுங்குகளில் சிலரது முரண்பாடான கையாள்கையும், தமிழ் இளைஞர்களின் விடுதலையைச் சிக்கலாக்கியிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இதே விதமான அனுபவங்களே முஸ்லீம் இளைஞர்கள் தொடர்பிலும் பெறப்படலாம். கைது செய்யப்படுபவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையான கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் தங்கள் முயற்சிகளை மேற்கொள்வது இயல்பானதே என்று தெரிவித்துள்ளார்