இங்கு மரணித்தாலும் மரணிப்போமேதவிர போராட்டத்தைக் கைவிடோம்

நாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த காணியையே கேட்கிறோம்!
இங்கு மரணித்தாலும் மரணிப்போமேதவிர போராட்டத்தைக் கைவிடோம்! 
300ஆவது நாளாகப்போராடும் பொத்துவில் கனகர்கிராமதமிழ்மக்கள்   சூளுரை!
(காரைதீவு  நிருபர் சகா)

நாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த காணியையே கோருகின்றோம். மரணித்தாலும் இந்த இடத்திலேயே மரணிப்போம்.தவிர போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.


இவ்வாறு (08) சனிக்கிழமை 300ஆவது நாளாகப் போராட்டத்திலீடுபட்டுவரும்  பொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்கள் தம்மைச்சந்தித்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம்; சூளுரைத்தனர்.

நேற்று(08) அவருடன் சம்மாந்துறை ஸ்ரீகோரக்கர் காளியம்பாள் ஆலய தலைவர் ம.பாலசுப்பிரமணியம் செயலாளர் .அழகுராஜா ஆகியோர் அங்கு விஜயம்செய்திருந்தனர்.

300ஆவது நாளில் அந்தமக்கள் குழுவினரிடம் மன்றாட்டமாக தெரிவிக்கையில்:


நாம் எமது நீதியான நியாயமான அஹிம்சைவழிப்போராட்டத்தில் 300நாட்களைக் கடத்தியது என்பது பெரியவிடயமல்ல. இன்னும் 600நாட்களும் இங்கு இருப்போம். ஆனால் எமது பிரச்சினைகள் கோரிக்கைகள் இன்னும் முறைப்படி மேதகு ஜனாதிபதியை எட்டவில்லையென்பதே எமது ஆதங்கம்.


எமது அரசியல்வாதிகள் அதைப்பெற்றுத்தருவோம் இதைப்பெற்றுத்தருவோம் என்று வீரவசனம் பேசுவார்கள். இறுதியில் அபிவிருத்தியுமில்லை உரிமையுமில்லை என்ற கையறுநிலைக்குச்சென்றுள்ளமை வேதனைக்குரியது. எமது பிரச்சினையொன்றே போதும் இலங்கைவாழ்தமிழ்மக்கள் சிந்திப்பதற்கு. இலங்கையின் இன்றைய நிலைமை அதற்கு நல்ல சாட்சி.


கண்ணுக்குமுன் நாம் வாழ்ந்த பூமியில் இன்று நாம் வாழ்வதற்கு இப்படி போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை.
நுளம்புக்கடிக்குமத்தியிலும் மலைப்பாம்புகளுக்கு மத்தியிலும் உறங்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை எமக்கு. எனினும் காணிகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் இருக்கிறோம்.


நாம் இங்கு  பூர்வீகமாக வாழ்ந்துவந்ததற்கு இங்கிருப்பவர்கள்; மட்டும் சாட்சியல்ல. இந்த உடைந்துதகர்ந்துகிடக்கும் வீடு வாசல்கள் மட்டும் சாட்சியல்ல. மாறாக இந்த மாவட்டத்தில் வாழும் சகோதர சிங்கள முஸ்லிம் மக்களும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.


எமது போராட்டத்தின்மூலம் பலரை இனங்கண்டிருக்கிறோம். நாம் வாக்களித்தவர்கள் என்ன செய்தார்கள்? வாக்களியாதவர்கள் என்ன செய்தார்கள்? என்பதையெல்லாம்  அறிந்துகொண்டோம். யார்யார் கேட்காமலேவந்து உதவிசெய்தார்கள்? தார்மீககடமையிருந்தும் செய்யாதவர்கள் யார்? என்பதையெல்லாம் அறிந்துள்ளோம். காலம் நேரம் வரும்  அதை அப்போது வெளிப்படுத்துவோம்.


யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வுகிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம். அடிக்கடி வந்துபார்த்து உதவிநல்கும்  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறிலுக்கு நன்றிகளைக்கூறுகின்றோம் என்று குறிப்பிட்டனர்.