மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ள 37 தேசிய அடையாள அட்டைகள்.

மட்டக்களப்பு தலைமையக தபாற்கந்தோர் தபாற்பெட்டியில் இனந்தெரியாதேரால் ஒரே தடவையில் போடப்பட்டிருந்த 37 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தேசிய அடையாள அட்டைகளை தபாற்கந்தோர் தபால் அதிபர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம். டி.தீர்கா வத்துர தெரிவித்தார்.

குறித்த தபாற்கந்தோரில் உள்ள தபாற்பெட்டியை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை வழமைபோல திறந்து கடிதங்களை எடுக்கும்போது அதில் பல தேசிய அடையாள அட்டைகள் இருப்பதை ஊழியர் அவதானித்துள்ளார். அதன்பின்னர், இந்த விடயத்தை தபால் அதிபர் கவனத்திற்கு கொண்டுச்சென்றதையடுத்து குறித்த தேசிய அடையாள அட்டைகளை பொலிஸ் நிலையத்தில் தபால் அதிபர் ஒப்படைத்துள்ளார்.

மட்டக்களப்பு(13). வவுணதீவு(6), களுவாஞ்சிக்குடி(2), கேகாலை (1), நாவலப்பிட்டி(1), காத்தான்குடி(8), கொக்கட்டிச்சோலை(1), களுத்துறை(1), மொனராகலை(1), திருகோணமலை(1), ஏறாவூர்(1) ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களது தேசிய அடையாள அட்டைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.