“சுவர்க்கத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள்இதையும் புலிகளின் போராட்ட காரணங்களையும் ஒப்பிட முடியுமா?

<புலிகளும், ஐஎஸ்ஸும் ஒன்றல்ல!> இந்த நொடியில் என் மனதில்… (08/06/19)

அமைச்சர் மனோகணேசன்.

“முஸ்லிம்கள் ஜஎஸ்காரர்களை காட்டிக்கொடுத்தார்கள். தமிழர்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை”.

ஆகவே, முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் என சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள்.

இப்படி பேச வேண்டாம் என முஜிபுர் ரகுமானையும் (ஐதேக), பிமல் ரட்நாயக்கவையும் (ஜேவிபி) சமீபத்தில் ஒரு சிங்கள டீவி அரசியல் நிகழ்வின் போது நான் சொன்னேன்.

இது தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விடும் முட்டாள் கருத்து.

ஏதோ இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமே தவறு செய்து விட்டார்கள் என்றும், பெரும்பான்மை சிங்களம் தவறே செய்யவில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும் கருத்து.

மற்றபடி புலிகள் போராட்டத்தின் போது தமிழரான ஒட்டுக்குழுக்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லையா? மேலும் நாங்கள் காட்டிக்கொடுத்தோம் என்று கூறிதான் முஸ்லிம்கள், பேரினவாதிகளிடமிருந்து தப்ப வேண்டுமா?

உண்மையில், இன்று புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்தியா கொண்டு வந்த 13ம் திருத்தம் கூட இன்னமும் இங்கே முழுமையாக அமுலாகவில்லை.

அடுத்தது, ஜஎஸ் என்பது வெளிநாட்டு இயக்கம். அது இலங்கையில் குண்டை வெடித்து இலங்கை மக்களை கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது. ஐஎஸ் வன்முறை ஒரு போராட்டம் மாதிரி தெரியவில்லை.

ஒரே நாளில் ஏழு குண்டுகளை வெடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து ஒருவர் விளங்காத பாஷையில் உரிமை கோருகிறார். இதற்கும், இலங்கைக்கும் என்னய்யா சம்பந்தம்?

ஆகவே ஐஎஸ் வன்முறை இலங்கையில் ஒரு போராட்டம் கிடையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐஎஸ் வன்முறையின் பின்னணி காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.

புலிகளின் வன்முறை தொடர்பாக அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் கூட, புலிகளின் போராட்ட காரணிகள் பகிரங்கமானவை. அவை நியாயமானவை. புலிகளின் போராட்டமே இலங்கையில் மாகாணசபையையாவது தர இலங்கை அரசை நிர்பந்தித்த பிரதான காரணமாக அமைந்தது என்பதை குறைந்தபட்சம் நேற்றைய, நாளைய வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாவது மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஐஎஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒருபோதும் ஒப்பிடவே முடியாது.

“சுவர்க்கத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள்” என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா? இதையும் புலிகளின் போராட்ட காரணங்களையும் ஒப்பிட முடியுமா?

ஆகவே இப்படி ஒப்பிட்டு பேசி, “முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள்”எனக்கூறி, பேரினவாத மனதை குளிரவைத்து, நியாயப்படுத்தி காலத்தை வீணடிக்காமல் பேரினவாதத்தை துடைத்தெறிய முன்வந்து போராட வேண்டும்.