டெட்டனேட்டர்கள் மீட்பு; பாடசாலை மூடப்பட்டது

கஹட்டகஸ்திகிலிய, குக்ளாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலிருந்து இன்று (06) மூன்று டெட்டனேட்டர்கள் மற்றும் சேவா நூலும் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து,  பாடசாலையை தற்காலிகமாக மூடியுள்ளதாக, அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக  பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர் சிரமதானத்தில் ஈடுபட்டபோது, பொலித்தீன் பையொன்றில் இடப்பட்டவாறு 3 டெட்டனேட்டர்களும் சேவா நூலும் காணப்பட்டன.

இது தொடர்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் குறித்த பாடசாலையின் அதிபர் தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பாடசாலை வளாகத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையிலேயே, குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம்  தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.