பழம் ஏடு படிக்க ஆள் இல்லை

—   படுவான் பாலகன் —

இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள் படுவான்கரையில் எங்குள்ளனர் எனும் தேடுதலை தேடவிளைந்தோம். அவ்வாறு சிந்தித்திருக்கும் போதுதான்,வெள்ளையனும் தனது மனதில் பட்டதினை கூற ஆரம்பித்தான்.

தமிழர்களுடைய வரலாறு தொன்மை வாய்ந்தது. காலஓட்டத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினாலும்,வெவ்வேறான பிரச்சினைகளினாலும் இலக்கியங்கள் அழிந்தமையும்,அழிக்கப்பட்டமையும் வரலாறு. தற்காலத்தில் இருந்து மூன்று,நான்கு தலைமுறைகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறை,பண்டுபாடு, கலை போன்ற பல்வேறு அம்சங்களும்,தற்போதைய நவீன கால யுகத்தில் மாறிவருகின்றன. இந்நடைமுறை மாற்றத்தால் பலவற்றை இழந்துவருகின்றோம். இந்நிலையில்,படுவான்கரைப்பிரதேச மக்கள் தமக்கு முன்னரான மக்கள் கடைப்பிடித்த கலைகளை இன்றும் தம்சூழலிலே ஆடி,அரங்கேற்றி வருகின்றனர். அதேவேளை இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டு, கூத்து,கரகம், கும்மி பாடல்களை எழுதக்கூடியவர்களும் இம்மண்ணிலே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றனர். நூலுருக்களாக தமது ஆக்கங்களை கொடுக்காவிட்டாலும், எழுதிய கதைகளை மக்கள் மத்தியிலே கலைகளின் ஊடாக கொடுக்ககூடிய கலைஞர்கள் உள்ளமையும் வரவேற்கத்தக்கதே. பல்வேறு மட்டங்களிலும், பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பலநூல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் படுவான்கரைப்பிரதேசத்தில் இருந்து குறைந்தளவிலான எழுத்துக்களே நூலுருப் பெற்றிருக்கின்றன. இதற்கு கலைஞர்கள் வறுமைப்படைத்தவர்களாக இருக்கின்றமையும் காரணமேயாகும். அதேவேளை எழுத்தாளர்களை தட்டிக்கொடுத்து, அவர்களது ஆக்கங்களை தொகுத்து வெளியிடக்கூடிய முயற்சியாளர்களும் குறைவே. தமது கலைகளினை தொடர்ந்தும் அடுத்தசந்ததிக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதே இம்மக்களின் பெருவிருப்புமாகும்.

தற்கால யுகத்தில் கணினி மூலமான செயற்பாட்டின் மூலமாக, இலகுவான முறையில் தமது விடயங்களை பதிவுசெய்யக்கூடிய சூழல் உள்ளது. ஆனால் இற்றைக்கு ஒருநூற்றாண்டு காலத்தினை கடந்துபார்க்கின்ற போது,ஓலைச்சுவடிகளிலேயே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. இதன்போது ஓலைச்சுவடிகளில் எழுத்துக்களுக்கான குத்துக்கள் வைக்கப்படுவதில்லை. அதேவேளை சில எழுத்துக்களும் தற்போதைய எழுத்து வடிவங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தன. இதனால் தற்காலத்தில் இருக்கின்ற எல்லோரும் ஏடுகளில் எழுதப்பட்டதை வாசிக்கமாட்டார்கள். ஒரு சிலர் மாத்திரமே வாசிக்கக்கூடியவர்களாக உள்ளனர். எனவெள்ளையனும் பேசிமுடிக்க.

ஏட்டுப்பிரதிகளை வாசிக்ககூடிய ஒருவரை படுவான்கரைப்பிரதேசத்தில் தேடி சென்ற போதுதான்,பழங்குடிமடு கிராமத்தில் ஒருவரை சந்திக்க  கிடைத்தது. அப்போதுதான் தனது அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

1952ம் ஆண்டு பிறந்து,பழங்குடிமேடு கிராமத்திலே வசித்துவருகின்ற கணபதிப்பிள்ளை சிவஞானமூர்த்தியையே அண்மையில் சந்தித்தோம். ஏட்டுப்பிரதி ஒன்றுடன் எம்முன் அமர்ந்துகொண்டார். அப்பிரதிகளை பார்த்தபோது அதன் எழுத்துக்கள் மிகத்தெளிவாக தெரிந்தது. 1927ம் ஆண்டு எழுதப்பட்ட சித்தாருட நொண்டிச்சிந்து ஏடாக அமைந்திருந்தது. ஆண்டுகள் தமிழ் எழுத்துக்களினாலையே எழுதப்பட்டிருந்தன. அவ்வேட்டினை வாசிக்க கூறிய போது, சிந்து என்பதினால் சிந்து நடையிலையே அதனை வாசித்துக் காட்டினார். மிகவேகமாகவே வாசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் இதனை எங்கு கற்றுக்கொண்டீர்கள் என வினவிய போது, கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பித்தால்,கண்ணகி வழக்குரை பாடுவார்கள், அப்போது அவர்களின் அருகிலே இருப்பேன் அவர்கள் பாடுவதை கவனிப்பேன். இதன்மூலமே இதனை பயின்றுகொண்டேன். எனது அப்பாவும் ஏடு எழுதியவர், வாசித்தவர் அப்போதும் பார்த்திருப்பேன் இவற்றின் மூலமாகவும் கற்றுக்கொண்டேன். இப்போதும் எனதருகே இருந்தீர்கள் என்றால் ஏட்டினை வாசிக்ககூடிய நிலையைப் பெற்றுவிடுவீர்கள் என்றார்.

இவ்வேட்டினை எழுதிமுடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என அவரிடம் வினவியபோது, ஏட்டிலையே அதுதொடர்பில் எழுதப்பட்டிருந்தது. 1927ம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி எழுத ஆரம்பிக்கப்பட்ட சித்தாருட நொண்டிச்சிந்து ஏடு 1927ம் ஆண்டு புரட்டாதி மாதம் 12ம் திகதி எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று 1890ம் ஆண்டு எழுதப்பட்ட ஏட்டினையும் வாசித்தாக கூறும் இவர்,ஏடுகளை கொண்டு கொடுத்தால் அவற்றினை வாசித்துக்காட்டுபவராக இருக்கின்றார். இதுவரை அரிச்சந்திரன் கதை,வள்ளியம்மானை,தெய்வேந்திரன் அம்மானை,கண்ணகி வழக்குரை, வாகட ஏடுகள் என பலவற்றை வாசித்துக் காட்டியுள்ளதுடன்,அவற்றினை தற்கால எழுத்திலும் கொப்பிகளில் எழுதியும் கையளித்துள்ளாதாக கூறகின்றார்.

1962ம் ஆண்டில் இருந்தே வாசிக்கப்பழகி கொண்டதாக கூறும் இவர், ஏடுகள் பல கறையான்கள் உண்டு அழிந்துவிட்டதாக கூறி கவலையுமடைந்தார். இதேவேளை எம்மக்கள் மத்தியில் பொதிந்துள்ள ஏடுகளை எடுத்து வாசித்து அவற்றினை தற்காலத்தவர்களும் வாசித்து அறியக்கூடிய நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்றார். படுவான்கரைப்பிரதேசத்திலும் பல உள்ளூர்புலவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களும் சமுகத்திற்கு வெளிக்காட்டப்படவேண்டியவர்களே.