“பேரினவாத நிகழ்ச்சி நிரலின் அனைத்து நகர்வுகளையும் மிக வன்மையாக கண்டிப்பதுடன், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டாக முன்னெடுத்துள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.”

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி-

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  அரசியல்  நகர்வுகள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நாட்டின் அனைத்து இன மக்களையும் பாதித்துள்ளது. எனினும், குறிப்பாக  முஸ்லிம் சமூகத்தினை பல்வேறு வகையிலும், பாரிய அளவில்  அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. இப்பயங்கரவாதத்திற்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினரும் ,பொலீசாரும் மிகப்பரவலாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதற்கான பூரணமான ஒத்துழைப்பினை முஸ்லிம் சமூகம் இதுவரை வழங்கி வருகின்றது.

எனினும்
இப்படியான சந்தர்ப்பம் ஒன்றிற்காக காத்திருந்த இனவாத சக்திகள் 21ம் திகதிய தாக்குதல்களை, தங்களது சுயநல அரசியல்  தேவைகளுக்காகவும், முஸ்லிம் விரோத பழிவாங்கல்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்தி, முஸ்லிம்கள் மீதான தங்களது அடக்கு முறைகளையும், இனவாத வன்முறைகளையும் பல வழிகளிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வினை தூண்டக்கூடிய வெறுப்புணர்வுப் பேச்சுக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முஸ்லிம்களின் துறைசார் புத்திஜீவிகள் மீதும் சுமத்தி, அவர்களுக்கு பயங்கரவாத சாயம் பூசவும் அவர்களை கைது செய்யவும் முயற்சித்து வருகின்றனர்.

நாட்டில்
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலைமையிலேயே இனவாத சக்திகள் பெரும் ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் ஒன்றுதிரட்டி முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்ற அளவிற்கு இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு மீறப்பட்டுக்  கொண்டிருக்கின்றது.
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும், பாதுகாப்புத்தரப்பினர் முன்னிலையிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றது.

சந்தேகத்தின்பேரில் பல முஸ்லிம் நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு இதுவரை விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சட்டத்தினை அப்பட்டமாக மீறி, மிக பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபட்ட வன்முறையாளர்களை அரசு கண்துடைப்பிற்காக கைது செய்வதும், பின்னர்  அவர்களை  விடுதலை செய்வதும் இன்றைய  நிலவரமாகவுள்ளது.

அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பூரணமான ஒத்துழைப்பினை முஸ்லிம் மக்கள் வழங்கி வருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்வாறு முஸ்லிம் மக்களை பாதுகாக்க தவறியிருப்பதுடன், இனவாத நடவடிக்கைகளுக்கு மௌனமாக துணை போவதனையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

2015ம் ஆண்டிற்கு முன்னர் இந்த நாட்டில் நிலவி வந்த ஒரு அராஜகமான ஆட்சியிலிருந்து மக்களைப்பாதுகாத்து, இந்த நாட்டில் ஒரு நல்லாட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் பலரும் ஒன்றிணைந்தனர். அவ்வாறு ஆரம்பத்தில் ஒன்றிணைந்தவர்களுள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நாமும் முக்கிய பங்காளிகளாக இருந்தோம். அதே போல பெருவாரியான முஸ்லிம் மக்களும் இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஒன்றிக்காக தங்களது முழுமையானஆதரவினை குறித்த தேர்தல்களில் வழங்கி , தப்போதைய அரசாங்கத்தினையும் வெற்றிபெறச்செய்திருந்தனர்.

ஆனால், அவ்வாறு பதவிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரத்தில் இருக்கின்ற காலப்பகுதியிலேயே இந்நாட்டு முஸ்லிம்கள் இவ்வாறான வரலாறு காணாத இனவாத அடக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக பாடுபட்டமையை நினைத்து இப்போது நாம் வெட்கப்படவேண்டியிருக்கின்றது.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறான அடக்குமுறைகளுக்கூடாக, முஸ்லிம் சமூகத்தினை திட்டமிட்ட வகையில் சிலர் தங்களது அரசியல் சுயலாபங்களுக்காக சிக்கலானதொரு இனவாத சகதிக்குள் தள்ள வியூகம் வகுத்த வேளையில், நமது அரசியல் தலைமைகள் ஒருமித்து முன்னெடுத்திருக்கின்ற இராஜதந்திர கூட்டு முயற்சியானது,  பாராட்டத்தக்கது.  இம்முயற்சியானது, முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்  ஜனநாயக வழி முறைகளிலும் இராஜதந்திர அணுகுமுறையிலும் வைத்துள்ள  நம்பிக்கைக்கையை  இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் பறை சாற்றியிருக்கின்றது.
ஏனைய சமூக புத்திஜீவிகள் சிலர் இக் கூட்டு  முயற்சியினை ‘ஆரவாரமில்லாத தீட்சண்யமான அரசியல் திட்டமிடல்’ என மெச்சுகின்ற  அளவிற்கு இம் முயற்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.  இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் விதமாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம் முயற்சியானது, இந்த நாட்டை இனவாதத்தின் மூலம் கூறு போட்டு, மக்களை பிரித்தாள முற்சித்த சகல இனவாத சக்திகளின் முகங்களிலும் கரியைப் பூசியுள்ளது.
இந்த முயற்சியினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, வரவேற்பதுடன்   இவ்வாறான கூட்டு முயற்சிகள்  சமூகத்திற்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட  வேண்டும் எனவும் வேண்டுகின்றது. அவ்வாறு முன்னெடுக்கப்படும்முயற்சிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது,  தனது முழுமையான ஆதரவினை வழங்கவும் தயாராகவுள்ளது.

ஆயினும், இவ்வாறான ஜனநாயக, நல்லாட்சி  வழிமுறைகளை  வெளிக்காட்டப்படுகின்றமையானது இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்து சமூகம் சார்ந்தும் விஸ்தரிக்கப்பட  வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சமாதானத்தையும், சகவாழ்வினையும், ஜனநாயக விழுமியங்களையும் நேசிக்கின்ற அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான முன்னெடுப்புகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அனைத்து  சக்திகளும் ஒன்றிணைந்தால் மாத்திரமே இந்த நாட்டின் சாபக்கேடான பயங்கரவாதத்தினையும், இனவாத சக்திகளையும் முறியடித்து, நாட்டில் உண்மையான நல்லாட்சியினையும் சமாதானத்தினையும் வலுப்படுத்த முடியும்.

எனவே, இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நாம்  வழங்கத் தயாராகவுள்ளோம்  எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.