யாரையும் கொலை செய்து யாரும் சொர்க்கம் போகமுடியாது’:

‘யாரையும் கொலை செய்து யாரும் சொர்க்கம் போகமுடியாது’:
சஹ்ரான் என்றதனிநபரால் முழுமுஸ்லிம் சமுகமும் வேதனையில்..
சாய்ந்தமருதில் அம்பாறை இராணுவகட்டளைத்தளபதி மகிந்தமுதலிகே.
(காரைதீவு குறூப் நிருபர் சகா)

முற்பிறப்பு மறுபிறப்பு பற்றி எமக்குத்தெரியாது. ஆனால் இருக்கின்ற இந்தப்பிறப்பில் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் மனிதனாக வாழப்பழகிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு இராணுவத்தின் 24வது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ்.எம்.எஸ்.முபாறக் தலைமையில் நோன்புதுறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று(2)மாலை நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றியபோதே கட்டளைத்தளபதி மகிந்தமுதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க விசேடஅதிரடிப்படையின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதி பொலிஸ்அத்தியட்சகர் ஆர்.எ.கே. ரத்னாயக்க உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு முன்னாள் உலமாசபைத்தலைவர் சட்டத்தரணி  என்.எம்.ஏ.முஜீப் (நளீமி)   தமிழிலும் ஆங்கிலத்திலும்  சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பிரபல சன்மார்க்க சொற்பொழிவாளர் அஷ் செய்க் எம்.எம்.எம். முனீர் முனவ்வர் (நளீமி ) சிங்களத்தில் சிறப்பு   சொற்பொழிவாற்றினார்.

அங்கு கட்டளைத்தளபதி மகிந்தமுதலிகே மேலும் உரையாற்றியதாவது:

முழு உலகமும் பேசப்பட்ட சாய்ந்தமருது மண்ணில் இருந்து பேசுவதில் பெருமையடைகின்றேன். சஹ்ரானின் தம்பி குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது உலகில் பிரபலமானது. அச்சம்பவத்தால் நானும் பிரபலமானேன்.
சஹ்ரான் என்ற தனிநபர் செய்தகாரியத்தால் இன்று அவர் சார்ந்த முழுமுஸ்லிம் சமுகமும் வேதனையிலுள்ளது. சந்தேகத்தில் கைதுசெய்யப்படுபவர்களும் முஸ்லிம்களாகவிருப்பதால் பயத்துடனும் உள்ளனர்.

அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கமுடியாது. அப்படி யாரும் பார்க்கவுமில்லை.
சஹ்ரான் மரணித்த பிற்பாடு சொர்க்கத்திற்குச்சென்றாரோ எங்குசென்றாரோ தெரியாது. 72பெண்களுடன் வாழ்கிறாரோ தெரியாது.  ஆனால் அவர் விட்டுச்சென்ற மனைவியை நாம் பாதுகாக்கிறோம். சஹ்ரானை அவர் விவாகரத்துச் செய்ய முயன்றிருக்கிறார்.

கடந்த 10வருடங்களாக இந்தநாட்டில் மக்கள் எவ்வளவு சந்தோசத்துடன் நிம்மதியாக வாழ்ந்துவந்திருந்தார்கள்.  அதனை அந்த சஹ்ரான் தொலைக்கவைத்துள்ளார். அவர் எங்குசென்றாரோ தெரியாது.
ஆனால் இலங்கையில் வாழும் இப்போது இருக்கக்கூடியவர்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். சமயத்தலைவர்கள் அதற்கு வழிகாட்டவேண்டும். சகல சமயங்களும் மனிதன் வாழ்வாங்குவாழ நல்லவழிகளையே காட்டுகின்றன.

இரத்தத்தில் தமிழ் இரத்தம் முஸ்லிம் இரத்தம் சிங்கள இரத்தம் என்று பார்ப்பதில்லை. எல்லா இரத்தமும் சிவப்புநிறம்தான். கடந்தசம்பவத்தின்போது அம்பாறையில் எமது இராணுவம் 300பேர் இரத்ததானம் செய்தனர்.

நாம் எது செய்வதாகஇருந்தாலும் நாடு என்று ஒன்றிருக்கவேண்டும். எமதுநாடு ஒரு தீவு. நாம் தீவைவிட்டு எங்கும் செல்லமுடியாது. சுதந்தரத்தை அனைவரும் இணைந்துதான் பெற்றெடுத்தார்கள். எனவே சகல இனமக்களும் இன மத மொழி பேதம் கடந்து ஒற்றுமையாக இலங்கையன் என்ற அடிப்படையில் வாழவேண்டும்.
தொடர்ந்து இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வதால் 5கிலோ எடை கூடியுள்ளேன். தலைவர் முபாறக் அடுத்தமுறையும் அழைப்பதாகக்கூறியுள்ளார். கட்டாயம்வருவேன். என்றார்.

அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க உரையாற்றுகையில்;

இஸ்லாம்கூறிய 5கடமைகளுள் ஒன்றான இந்த ரமழான் நோன்புகாலத்தில் பல படிப்பினைகளை கற்கிறோம்.ஏழைகளுக்கு உதவுவதும் மார்க்க கடமையாகவுள்ளது.அது நல்லது.
மற்றவருடைய வேதனையை ஒருகணம் எமது வேதனையாக நினைத்துப்பார்த்தால் உலகில் பிரச்சினைகளே எழாது. இலங்கை முழுஉலகுக்கும் முன்னுதாரணமாக திகழ நாம் ஒன்றுபடவேண்டும் என்றார்.

கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துகலசங்கரத்ன தேரர் உரையாற்றுகையில்:

30வருட யுத்தத்திலிருந்து மீண்டு 10வருடங்கள் நிம்மதியாகவிருந்தோம். அதனை சஹ்ரான் அழித்துவிட்டார்.
எமது சமுகங்கள் சமயத்தலைவர்களை மதிப்பதில்லை. ஆனால் அரசயில்வாதிகளை மதிக்கிறார்கள். இன்றையநிலைக்கு அதுதான் காரணம்.  மதத்தலைவர்கள் மதிக்கப்படவேண்டும்.
நாம் நமக்குள்ளே பிரித்துபிரித்து சுவர் கட்டாமல் அனைவருக்கும் பொதுவான உறவுப்பாலத்தைக் கட்டவேண்டும்.ஆம் சமாதானத்திற்கான பாலத்தை கட்டவேண்டும். என்றார்.

கல்முனை மாநகரமேயர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் அம்பாறை மாநகரசபை மேயர் சுதத் கல்முனை வர்த்தகசங்கத்தலைவர் எம்.சித்தீக் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல்தலைவர் வை.எம்.ஹனிபா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வர்த்தப்பிரமுகர்களும் சிவில்சமுகப்பிரதிநதிகளும் கலந்துசிறப்பித்தனர்