இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பை இலங்கை அரசும் ஏற்கவேண்டும்!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ

இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்த்த பொறுப்பை இலங்கை அரசாங்கமும் ஏற்க வேண்டும். மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஶ்ரீ முத்துவிங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் கடந்த ஏப்ரல் 21 ம் திகதி இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களுன் 41ஆம் நாள் நினைவு 31/05/2019 அஞ்சலி நிகழ்வு நடைபெற்றபோது அதில் அஞ்சலி உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்

 

இலங்கையிலே இடம்பெற்ற மிகப் பெரிய மிலேச்சத்தனமான தாக்குதலாக இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஏப்ரல் 21 தாக்குதலைக் கருதலாம்.

 

இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 29பேர்காவுக்கொள்ளப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளின் குழுவாக இருப்பவர்களினால் இத்தாக்குதல் இலங்கையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தீவிரவாதிகளும் அல்ல, கிளர்ச்சியாளர்களும் அல்ல இவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற பதம் மாத்திரமே பொருந்தும். இந்தப் பயங்கரவாதிகள் மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

 

 

எமது இலங்கையில் இது முதலாவது தாக்குதலாக இருப்பினும் இத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்து அரசாங்கத்திற்கு அறிவித்ததாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள், பிரதமர், ஜனாதிபதி உட்பட சகலரும் அறிந்திருந்த போதும் இதனைக் கண்டும் காணாமல் இருந்தும், இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததன் காரணமாக நாங்கள் எமது மதிப்பிற்குரிய உயிர்களை இழந்திருக்கின்றோம். இதற்கு முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி உட்பட அரசாங்கமே ஏற்க வேண்டும்.

இவர்கள் அப்படி அறிந்திருந்தும் ஏன் தடுக்கவில்லை என்பதை ஆராய்ந்தால் எனக்கு இப்படியும் ஒரு சந்தேகம் வருகின்றது அதாவது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கிறிஷ்தவ தேவாலயங்களைத்தான் இலக்கு வைத்துள்ளனர் பௌத்த விகாரைகளையோ பௌத்தர்களையோ இலக்கு வைக்கவில்லைத்தானே பேசாமல் விடுவோம் என்று அலட்சியமாக இருந்தார்களோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

சிலருக்கு இப்பதான் ஞானம் பிறந்ததுபோல்

விடுதலைப்புலிகளை நினைவு படுத்தி அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத குழு போன்று அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து எந்த தற்கொலை தாக்குதல்களையும் செய்யவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

உண்மையில் விடுதலைப்புலிகளுடன் இஷ்லாமிய பயங்கரவாத குழுவை ஒப்பிடுவதோ அவர்களின் கொள்கையுடன் இஸ்லாமிய பயங்கர வாத குழுவை இணைத்து விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று

ஏன் 1970, காலப்பகுதியில் இலங்கையில் ஜே.வீ.பி மேற்கொண்ட கிளர்ச்சிக்கு கூட ஒரு கொள்கை இருந்தது இலங்கை அரசாங்கத்தை தாம் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களின் போர் நடவடிக்கை தாக்குதல்கள் இருந்தன அவர்களும் பெரிய அளவில் பொதுமக்களை இலக்கு வைத்து எந்த தற்கொலை தாக்குதல்களையும் நடத்தவில்லை.

விடுதலைப்புலிகள்,ஜே.வி.பி கிளர்சியாளர்கள் எவருமே மேற்கொள்ளாத மலேச்சத்தனமான மதவாத படுகொலை தாக்குதலை நடத்திய இஷ்லாமிய பயங்கர வாதிகளின் ஒருநாள் தாக்குதலை ஒருமாத காலத்தினுள் அடக்கி விட்டதாக பாதுகாப்பு படை அறிவித்துள்ளது நல்ல விடயம் இருந்தும் இன்னும் சில சூத்திர தாரிகள் அரசியல் முகமூடிக்குள் ஒழித்திருப்பதாக சந்தேகம் பலரிடம் உள்ளது அந்த சந்தேகம் தமிழர்களிடம் மட்டுமன்றி பௌத்த துறவிகளிடமும் இருப்பதனால்தான் தற்போது உண்ணாவிரத போராட்டங்களும் இடம்பெறுவதை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.