மட்டு.கச்சக்கொடியில் 195வது மாதிரிக்கிராமம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டததின் மண்முனை தென்மேற்கு பிரதே செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடிசுவாமி மலை கிராமத்தில் அமைக்கப்பட்ட கணபதிபுரம் மாதிரிக்கிராமம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று(01) சனிக்கிழமை இடம்பெற்றது.

195வது மாதிரிக்கிராமத்தினை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.

மண்முனை தென்மேற்கு முதன்முறையாக அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட முதலாவது மாதிரிக்கிராமம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிதாக அமைக்கப்பட்ட 25வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டமையுடன், நீர் மற்றும் மின்சாரவசதி, உள்ளக பாதை வசதி, பிரவேசப்பாதை வசதி போன்றனவும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் போது, கணபதிபுரம் மாதிரிக்கிராம 25குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 25காணித்துண்டுகள், பயனாளிகள் 850பேரிற்கு வீடமைப்பு உதவிக்கான காசோலை, 25பேருக்கு சொந்துருபியச கடன், சில்பசவிய பயிலுனர்கள் 50பேருக்கான உதவிகள், கண்பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் போன்றனவும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மாவட்ட நகரமுதல்வர், பிரதேசசபைகளின் தவிசாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.