ஊடகவியலாளர் ரிஸ்வி மஹ்ரூப் கைது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும் – சுதந்திர ஊடக இயக்கம்

ஊடகவியலாளர் முகம்மது ரிஸ்வி மஹ்ரூப் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும்  என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுர பிரதேசத்தில் பிராந்திய ஊடகவியலாளராக  சேவையில் ஈடுபட்டுவந்த முகம்மது ரிஸ்வி மஹ்ரூப் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் சுதந்திர ஊடக இயக்கம் இந்த கைது நடவடிக்கை நியாயத்துக்கு புறம்பானதும் ஊடகவியலாளரின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதுமாகும் எனவும் தெரிவித்துக்கொள்கிறது.

பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முகம்மது ரிஜ்வி மஹரூப்பின் கட்டடத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பிரசார உரைகள் அடங்கிய விடியோ இறுவட்டுக்கள் கண்டுபிடிக்கப்பதன் காரணமாக அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீத்தவான் உத்தரவின் படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து, குறிப்பிட்ட இருவட்டுக்களில் தவ்ஹீத் ஜமாத்தின் பிரசார உரைகள் அடங்கி இருக்கவில்லை என்றும் அவருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்போவதில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் ரிஸ்வி மஹ்ரூப் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் இது தொடர்பாக போலீசார் நடந்துகொண்டுள்ள முறை கருத்து சுதந்திரம் வெளியீட்டு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பாரிய, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.

தொலைக்காட்சித் துறையில் தசாப்த காலமாக  ஊடகவியலாளராக பணியாற்றிய இவருக்கு பல நாட்கள் அனாவசியமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்க நேர்ந்ததானது அவரது தொழில் வாழ்க்கைக்கும், அதுபோல் இந்த நாட்டின் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது என்று சுதந்திர ஊடக இயக்கம் நம்புகிறது.

நடந்த இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், வெளிப்பாடு சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் கருமமாற்றுமாறு அரசு உட்பட சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

 

 

விரஞ்சன ஹேரத்

ஒருங்கிணைப்பாளர்

சுதந்திர ஊடக இயக்கம்